மருத்துவமனையில் இருந்து சுப்மன் கில் டிஸ்சார்ஜ் - பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்பாரா?
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுப்மன் கில் சென்னை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.;
சென்னை,
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சுப்மன் கில். இவர் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்.
இதனிடையே, கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதின. இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக இஷான் கிஷன் களமிறக்கப்பட்டார். சுப்மன் கில்லுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டதால் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகின.
டெங்கு காய்ச்சல் காரணமாக சுப்மன் கில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சுப்மன் கில் உடலில் ரத்த தட்டை அணுக்கள் குறைவாக உள்ளதாகவும் அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகின.
இந்நிலையில், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து சுப்மன் கில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும் ஓய்வு எடுக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளதால் வரும் 14ம் தேதி நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சுப்மன் கில் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.