உலகக்கோப்பை கிரிக்கெட்: வெற்றிக் கணக்கை தொடங்குமா இலங்கை? நெதர்லாந்துடன் இன்று மோதல்
உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் போட்டியில் இலங்கை-நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.;
லக்னோ,
உலகக்கோப்பை கிரிக்கெட்டில் லக்னோவில் இன்று நடக்கும் 19-வது லீக்கில் ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணி, குசல் மென்டிஸ் தலைமையிலான இலங்கை அணியுடன் மோதுகிறது.
முன்னாள் சாம்பியனான இலங்கை நடப்பு தொடரில் வெற்றி கணக்கை தொடங்காத ஒரே அணியாக கடைசி இடத்தில் தத்தளிக்கிறது. இலங்கை அணி தனது முதல் 3 ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா ஆகிய அணிகளிடம் உதை வாங்கியது. முதல் 2 ஆட்டங்களில் இலங்கை அணி 320 ரன்களுக்கு மேல் குவித்தாலும், அந்த அணியின் பவுலர்கள் ஒருசேர சொதப்பியதால் பாதகமாக அமைந்தது.
பந்து வீச்சில் இதுவரை 7 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கும் மதுஷன்காவையே அந்த அணி வெகுவாக நம்பி இருக்கிறது. பந்து வீச்சில் எழுச்சி பெற மற்ற பவுலர்களும் அவருடன் ஒருசேர கைகோர்க்க வேண்டியது அவசியமானதாகும். வலுவான அணிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக தோல்வியை தழுவிய இலங்கை அணி வெற்றிக் கணக்கை தொடங்கும் முனைப்புடன் காத்திருக்கிறது.
நெதர்லாந்து அணி தனது முதல் 2 ஆட்டங்களில் முறையே 81 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடமும், 99 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடமும் பணிந்தது. ஆனால் கடந்த ஆட்டத்தில் 38 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்தது. உலகக் கோப்பை தொடரில் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிக்கு எதிராக பெற்ற இந்த முதல் வெற்றியின் மூலம் நெதர்லாந்து அணியின் நம்பிக்கை நிச்சயம் அதிகரித்து இருக்கும்.
எளிதில் கணிக்க முடியாத அணியாக வலம் வரும் நெதர்லாந்து அணியில் வான் பீக், பால் வான் மீக்ரென், வான்டெர் மெர்வ், பாஸ் டி லீட் ஆகியோர் பந்துவீச்சில் சிறப்பாக செயல்படுகிறார்கள். ஆனால் தொடக்க வரிசை பேட்ஸ்மேன்களின் தடுமாற்றம் அந்த அணிக்கு ஒரு பிரச்சினையாக இருக்கிறது. அவர்கள் கணிசமாக ரன் குவித்தால், அந்த அணி இலங்கைக்கும் கடும் சவால் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.