உலகக் கோப்பை கிரிக்கெட்: வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாகவும் ஆடுகளங்களை அமைக்க ஐ.சி.சி. அறிவுறுத்தல்
ஆடுகளத்தில் முடிந்த அளவுக்கு அதிக புற்களை விடுமாறு பிட்ச் பராமரிப்பாளர்களை ஐ.சி.சி. அறிவுறுத்தியுள்ளது.
துபாய்,
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி சென்னை, மும்பை, ஆமதாபாத், பெங்களூரு, டெல்லி உள்பட இந்தியாவின் 10 நகரங்களில் நடக்கிறது. அடுத்த மாதம் 5-ந்தேதி தொடங்கும் இந்த போட்டியில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 10 அணிகள் பங்கேற்கின்றன.
பொதுவாக இந்திய ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்கு உகந்தவை என்பதால் அனைத்து அணிகளும் கூடுதலாக சுழற்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்துள்ளன. இந்த உலகக் கோப்பையில் பனியின் தாக்கம் முக்கிய பங்குவகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பனிப்பொழிவில் பந்து ஈரமானால் அதை சரியாக பிடித்து வீசுவது சிரமமாக இருக்கும். இத்தகைய சூழல் 2-வது பேட்டிங் செய்யும் அணிக்கு சாதகமாக இருக்கும்.
இன்னொரு பக்கம் ஆடுகளம் முழுக்க முழுக்க சுழற்பந்து வீச்சுக்கு உகந்ததாக மட்டும் இருந்து விடக்கூடாது என்பதில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) விழிப்புடன் உள்ளது. வேகப்பந்து வீச்சுக்கும் ஒத்துழைக்கும் வகையில் ஆடுகளத்தில் முடிந்த அளவுக்கு அதிக புற்களை விடுமாறு பிட்ச் பராமரிப்பாளர்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அறிவுறுத்தியுள்ளது.
பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு சரிசம போட்டி இருக்கும் வகையில் ஆடுகளம் இருக்க வேண்டும் என்று ஐ.சி.சி. கூறியுள்ளது. மேலும் பவுண்டரி தூரத்தை 70 மீட்டருக்கு மேல் ைவக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளது. ஐ.சி.சி. விதிப்படி பவுண்டரி தூரம் குைறந்தபட்சம் 65 மீட்டராகவும், அதிகபட்சம் 85 மீட்டர் கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.