சேப்பாக்கத்தில் சென்னை-மும்பை இடையிலான ஆட்டம் - இன்று நடக்கிறது
சென்னை-மும்பை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கிறது.;
சென்னை,
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு நடக்கும் 49-வது லீக் ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்சும், 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்சும் மல்லுக்கட்டுகின்றன.
நடப்பு தொடரில் இதுவரை 10 ஆட்டங்களில் ஆடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவில்லை என்று 11 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருக்கிறது. லக்னோவுக்கு எதிரான முந்தைய ஆட்டம் மழையால் பாதியில் ரத்தானதால் புள்ளியை பகிர்ந்து கொள்ள வேண்டியதாயிற்று.
சென்னை அணியில் டிவான் கான்வே (5 அரைசதத்துடன் 414 ரன்) ருதுராஜ் கெய்க்வாட் (354 ரன்), ரஹானே, ஷிவம் துபே, மொயீன் அலி ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா (14 விக்கெட்) கட்டுக்கோப்புடன் பவுலிங் செய்கிறார். ஆனால் துஷர் தேஷ்பாண்டே (17 விக்கெட்), பதிரானா (7 விக்கெட்) ஆகியோர் கணிசமாக விக்கெட் வீழ்த்தினாலும் கடைசி கட்டத்தில் ரன்களை வாரி வழங்குவது பின்னடைவாக அமைந்துள்ளது. ஆடுகளத்தன்மை மற்றும் பேட்ஸ்மேனின் மனநிலையை உணர்ந்து அதற்கு ஏற்ப பந்து வீசும்படி கேப்டன் டோனி அறிவுரை வழங்கி இருக்கிறார்.
காயத்தில் இருந்து குணமடைந்து லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தின் மூலம் மறுபிரவேசம் செய்த வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் 4 ஓவர்களில் 41 ரன்களை விட்டுக்கொடுத்தார். அவர் பழைய நிலைக்கு திரும்ப வேண்டியது அவசியமாகும். இதே போல் காயத்தில் இருந்து தேறியுள்ள ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டதை பார்க்கும் போது இன்றைய ஆட்டத்தில் அவரது பெயர் அணித்தேர்வுக்கு பரிசீலிக்கப்படும் என்று தெரிகிறது.
சென்னை அணி ஏற்கனவே மும்பையை அவர்களது இடத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் சாய்த்தது. மேலும் சேப்பாக்கம் மைதானம் சென்னை அணியின் கோட்டையாக வர்ணிக்கப்படுகிறது. இந்த சீசனில் இங்கு சென்னை அணி ஆடியுள்ள 4 ஆட்டங்களில் 2-ல் வெற்றி பெற்றது. மற்ற 2 ஆட்டத்திலும் நெருங்கி வந்து மயிரிழையில் கோட்டை விட்டது. மெதுவான தன்மை கொண்ட இந்த ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கக்கூடும்.
இந்த சீசனில் தொடக்கத்தில் தடுமாற்றத்தை சந்தித்த மும்பை இந்தியன்ஸ் அணி சரியான நேரத்தில் எழுச்சி கண்டிருக்கிறது. அந்த அணி 9 ஆட்டங்களில் ஆடி 5-ல் வெற்றி, 4-ல் தோல்வி என்று 10 புள்ளிகளுடன் இருக்கிறது. ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டங்களில் 200-க்கு மேலான இலக்கை விரட்டிப்பிடித்து (சேசிங்) சாதனை படைத்தது. இவ்விரு ஆட்டங்களிலும் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக அரைசதம் விளாசினார். டிம் டேவிட், திலக் வர்மா, இஷான் கிஷனும் நல்ல நிலையில் உள்ளனர். கடந்த 3 ஆட்டங்களில் தொடர்ந்து ஒற்றை இலக்கத்தில் வீழ்ந்த ரோகித் சர்மாவின் பேட்டும் பேச ஆரம்பித்தால், மும்பை மேலும் அபாயகரமான அணியாக மாறி விடும்.
ஏற்கனவே சென்னையிடம் தோல்வி அடைந்திருப்பதால் அதற்கு பதிலடி கொடுக்க மும்பை வீரர்கள் வரிந்துகட்டுவார்கள் என்பதால் களத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்றுதீர்ந்து விட்டதால் ஸ்டேடியமும் ரசிகர்களின் ஆர்ப்பரிப்பால் அதிரப்போகிறது. ஐ.பி.எல். தொடரில் இவ்விரு அணிகள் இதுவரை 35 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 20-ல் மும்பையும், 15-ல் சென்னையும் வெற்றி கண்டுள்ளன.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
சென்னை: ருதுராஜ் கெய்க்வாட், கான்வே, ரஹானே, ஷிவம் துபே, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, டோனி (கேப்டன்), தீக்ஷனா அல்லது மிட்செல் சான்ட்னெர், துஷர் தேஷ்பாண்டே, தீபக் சாஹர், பதிரானா அல்லது பென் ஸ்டோக்ஸ்.
மும்பை: ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், திலக் வர்மா, நேஹல் வதேரா, பியுஷ் சாவ்லா, ஜோப்ரா ஆர்ச்சர், குமார் கார்த்திகேயா, அர்ஷத் கான்.