சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா? வெளியான தகவல்

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ளது.

Update: 2024-07-11 06:12 GMT

image courtesy: AFP

மும்பை,

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் 8 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நடைபெற உள்ளது. பாகிஸ்தானில் நடக்கும் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க 8 அணிகள் தகுதிபெற்றுள்ளன. உலகக்கோப்பை தொடரில் டாப் 8 இடங்களை பிடித்த அணிகள் இந்த தொடரில் விளையாட உள்ளன. இந்த தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி, பாகிஸ்தான் செல்லுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில், இந்தியா - பாகிஸ்தான் இடையே போதிய நல்லுறவு இல்லாத காரணத்தால் கடந்த 2008-ம் ஆண்டுக்கு பிறகு, பாகிஸ்தானுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் செல்லவில்லை. ஐ.சி.சி. தொடர்களில் மட்டுமே இரு அணிகளும் மோதி வருகின்றன.

இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான வரைவு கால அட்டவணையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ஐ.சி.சி.யிடம் சமர்பித்தது. பாகிஸ்தான் அணி சமர்பித்த இந்த வரைவு அட்டவணைக்கு பி.சி.சி.ஐ. தரப்பில் எந்த ஒப்புதலும் இதுவரை அளிக்கப்படவில்லை.

இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா? என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக பாகிஸ்தான் செல்ல இந்திய அணி மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துபாய் அல்லது இலங்கையில் போட்டிகளை நடத்துமாறு ஐசிசியிடம் பிசிசிஐ வலியுறுத்துவதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரிலும், இந்திய அணி பங்கேற்ற போட்டிகள் மட்டும் துபாய் மற்றும் இலங்கையில் நடைபெற்றது நினைவுகூரத்தக்கது. எனவே, இதே முறையை பின்பற்றி சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் இந்தியா பங்கேற்கும் போட்டி துபாய், இலங்கையில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் மட்டுமே நடத்த திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்