ப்ரூக் சதம், அபிஷேக்-மார்க்ரம் அதிரடி: ஐதராபாத் 228 ரன்கள் குவிப்பு...!

ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ஐதராபாத் அணிகள் மோதி வருகின்றன.

Update: 2023-04-14 15:45 GMT

Image Courtesy: @IPL 

கொல்கத்தா,

16வது ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ஐதராபாத் அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதையடுத்து ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரரகளாக ஹாரி ப்ரூக் மற்றும் மயங்க அகர்வால் களம் இறங்கினர்.

இதில் ஹாரி ப்ரூக் ஒரு புறம் அதிரடியில் மிரட்ட மறுபுறம் அகர்வால் 9 ரன்னும், அடுத்த வந்த திரிபாதி 9 ரன்னும் எடுத்த நிலையில் அடுத்தடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். இதையடுத்து ஹாரி ப்ரூக்குடன் கேப்டன் எய்டன் மார்க்ரம் ஜோடி சேர்ந்தார். இந்த இணை அதிரடியில் மிரட்டி வேகமாக ரன்களை குவித்தது.

அதிரடியில் மிரட்டிய இந்த இணையால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. ப்ரூக், மார்க்ரம் இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் மார்க்ரம் அரைசதம் அடித்த கையோடு 50 ரன்னில் வீழ்ந்தார். இதையடுத்து ப்ரூக்குடன் அபிஷேக் சர்மா ஜோடி சேர்ந்தார்.

இந்த இணையும் அதிரடியில் மிரட்டி கொல்கத்தாவின் பந்துவீச்சை நாலாபுறம் விரட்டியது. ஐதராபாத் அணி 18 ஓவர்களில் 200 ரன்களை எட்டியது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா 17 பந்தில் 32 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து கிளாசென் களம் இறங்கினார்.

ஒரு முனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ப்ரூக் 55 பந்தில் சதம் அடித்து அசத்தினார். நடப்பு ஐபிஎல் தொடரில் அடிக்கப்பட்ட முதல் சதம் இதுவாகும். இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் குவித்துள்ளது. இதையடுத்து 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா ஆட உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்