சொந்த ஊரில் வெற்றிக்கணக்கை தொடங்குமா பெங்களூரு.. பஞ்சாப் அணியுடன் இன்று மோதல்
இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுக்கட்டுவதால் ரன் மழையை எதிர்பார்க்கலாம்.
பெங்களுரு,
17-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் கடந்த 22-ம் தேதி சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.
பெங்களுரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் உதை வாங்கியது. அந்த ஆட்டத்தில் 78 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தவித்த பெங்களூரு அணியை தினேஷ் கார்த்திக், அனுஜ் ரவாத் ஆகியோர் சிறப்பாக ஆடி காப்பாற்றினர். 173 ரன்கள் திரட்டிய போதிலும் அந்த ஸ்கோரை வைத்து சென்னையை மடக்க முடியாமல் பணிந்தது. இப்போது சொந்த ஊர் ரசிகர்கள் முன்னிலையில் அதுவும் பேட்டிங்குக்கு உகந்த மைதானத்தில் ஆடுவதால் வெற்றிக் கணக்கை தொடங்க தீவிர முனைப்பு காட்டுவார்கள்.
பஞ்சாப் கிங்ஸ் தனது முதல் ஆட்டத்தில் டெல்லிக்கு எதிராக 176 ரன் இலக்கை சாம் கர்ரன் (63 ரன்), லியாம் லிவிங்ஸ்டனின் (38 ரன்) சூப்பரான பேட்டிங்கால் 4 பந்து மீதம் வைத்து எட்டிப்பிடித்தது. அந்த வெற்றிப்பயணத்தை நீட்டிக்கும் ஆவலில் உள்ள பஞ்சாப் அணியில் ஜானி பேர்ஸ்டோ பார்முக்கு திரும்பினால் அதன் பேட்டிங் வரிசை இன்னும் வலுப்படும். இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுக்கட்டுவதால் ரன் மழையை எதிர்பார்க்கலாம்.