பெங்களூரு அதிரடி பேட்டிங்: சென்னை அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயம்

பெங்களூரு அணி தரப்பில் அதிகபட்சமாக டு பிளெஸ்சிஸ் 54 ரன்கள் அடித்தார்.

Update: 2024-05-18 16:29 GMT

பெங்களூரு,

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும் 4-வது அணியை நிர்ணயிக்கும் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடி வருகின்றன.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் கெய்க்வாட் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி மற்றும் பாப் டு பிளெஸ்சிஸ் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் இணைந்து பெங்களூரு அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தனர்.

இருவரும் இணைந்து தொடக்க விக்கெட்டுக்கு 78 ரன்கள் சேர்த்த நிலையில், விராட் கோலி 47 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து டு பிளெஸ்சிஸ் உடன் ரஜத் படிதார் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து அசத்திய டு பிளெஸ்சிஸ் துரதிஷ்டவசமாக ரன் அவுட் ஆனார்.

பின்னர் கை கோர்த்த கேமரூன் கிரீன் - படிதார் இணை சென்னை அணியின் பந்துவீச்சை அடித்து ஆடினர். படிதார் 23 பந்துகளில் 41 ரன்களில் ஆட்டமிழந்தார்.

20 ஓவர்களில் பெங்களூரு 5 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக பாப் டு பிளெஸ்சிஸ் 54 ரன்கள் குவித்தார். சென்னை தரப்பில் அதிகபட்சமாக ஷர்துல் தாக்கூர் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 219 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி சென்னை களமிறங்க உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்