ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கிறது - வாரிய கூட்டத்தில் முடிவு
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உயர்மட்ட கமிட்டி கூட்டம் மும்பையில் நேற்று நடந்தது.
மும்பை,
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உயர்மட்ட கமிட்டி கூட்டம் மும்பையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், அக்டோபர் 16-ந் தேதி தொடங்கும் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தும் மாற்று வீரர் (இம்பேக்ட் வீரர்) விதிமுறையை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டது.
மாற்று வீரர் விதிமுறை கடந்த ஆண்டு முஷ்டாக் அலி கோப்பை போட்டியில் அறிமுகம் செய்யப்பட்டாலும், அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு ஐ.பி.எல். போட்டியில் அமல்படுத்தப்பட்டது. ஐ.பி.எல். போட்டியை போன்று முஷ்டாக் அலி போட்டியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் விதிமுறையை பயன்படுத்தவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு ஆட்டத்திலும் ஒரு அணி ஒரு மாற்று வீரரை பயன்படுத்த முடியும். ஆனால் இந்த விதிமுறை கட்டாயம் கிடையாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவில் வருகிற செப்டம்பர் 23-ந் தேதி முதல் அக்டோபர் 8-ந் தேதி வரை நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணிகள் பங்கேற்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டி நடைபெற இருப்பதால் இரண்டாம் தர இந்திய ஆண்கள் அணியே ஆசிய விளையாட்டு போட்டியில் கலந்து கொள்கிறது. அதேநேரத்தில் முன்னணி வீராங்கனைகள் அடங்கிய வலுவான இந்திய பெண்கள் அணி பங்கேற்கிறது.