3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஆஸ்திரேலியா..!

47.2 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்தது.;

Update: 2023-11-16 16:46 GMT

image courtesy: ICC twitter

கொல்கத்தா,

இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற 2-வது அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய குயின்டன் டி காக் 3 ரன்னிலும் டெம்பா பவுமா ரன் எதுவும் எடுக்காமலும் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர். தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட்டாகினர்.

24 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தென் ஆப்பிரிக்க அணி திணறியது. இந்த நிலையில், 14 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட்டுகள் இழப்புக்கு தென் ஆப்பிரிக்கா 44 ரன்கள் எடுத்திருந்தபோது, மழை பெய்ததன் காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் மழை நின்றதும் ஆட்டம் மீண்டும் தொடங்கியது.

அதிரடியாக விளையாடிய ஹென்ரிச் கிளாசன் 47 ரன்கள் எடுத்து அவுட்டானார். மறுபுறம் டேவிட் மில்லர் சிறப்பாக விளையாடி சதமடித்து 101 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இறுதியில் 49.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தென் ஆப்பிரிக்கா 212 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது.

அந்த அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து 62 ரன்கள் எடுத்து அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரர் டேவிட் வார்னர் 29 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த மிட்செல் மார்ஷ் டக்அவுட்டானார். தொடர்ந்து வந்த ஸ்டீவன் ஸ்மித் 30 ரன்களும், மார்னஸ் லபுசேன் 18 ரன்களும், கிளென் மேக்ஸ்வெல் 1 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். ஜோஷ் இங்லிஷ் 28 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

இந்த நிலையில் 47.2 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்தது. மிட்செல் ஸ்டார்க் 16 ரன்களுடனும், பாட் கம்மின்ஸ் 14 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதையடுத்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.19-ந்தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா, இந்தியாவுடன் மோத உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்