ஆசிய கோப்பை தொடர்; இலங்கை மைதான ஊழியர்களுக்குப் பரிசுத்தொகை அறிவித்த ஜெய் ஷா...!

ஆசிய கோப்பை தொடரில் மழைக்கு நடுவே ஆட்டங்களை நடத்தி முடிக்க காரணமாக இருந்த இலங்கை மைதான ஊழியர்களுக்கு ஜெய்ஷா பரிசுத்தொகை அறிவித்துள்ளார்.

Update: 2023-09-18 04:14 GMT

புதுடெல்லி,

6 அணிகள் பங்கேற்ற 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 30-ந்தேதி தொடங்கியது. இலங்கை, பாகிஸ்தான் இணைந்து நடத்திய இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் மற்றும் சூப்பர்4 சுற்று முடிவில் இந்தியாவும், இலங்கையும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

இந்த நிலையில் இவ்விரு அணிகளில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நேற்று அரங்கேறியது. இதில் இலங்கை அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 8வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

முன்னதாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் வாரியங்களுக்கு இடையேயான பிரச்சினையில் இத்தொடரின் பெரும்பாலான ஆட்டங்கள் இலங்கையில் நடத்தப்படும் என்று ஆசிய கவுன்சில் அறிவித்தது. ஆனால் அங்கு தற்போது மழைக்காலம் என்பதால் ஆரம்பம் முதலே இலங்கையில் நடைபெற்ற பெரும்பாலான ஆட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டன.

இருப்பினும் மழை 10 நிமிடங்கள் ஓய்ந்தால் கூட அதற்குள் மைதானத்துக்குள் இருக்கும் தண்ணீரை அகற்றி உடனடியாக ஆட்டத்தை மீண்டும் துவக்கும் அளவுக்கு கண்டி மற்றும் கொழும்பு மைதானப் பராமரிப்பாளர்கள் தீயாக வேலை செய்தனர்.

இந்நிலையில், திட்டமிட்டபடி ஆட்டங்கள் நடைபெற முக்கியக் காரணமாக இருந்த மைதான ஊழியர்களை கவுரவிக்கும் வகையில் 50 ஆயிரம் அமெரிக்க டாலர்களை அளிப்பதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் மற்றும் இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளன.

இதுதொடர்பாக ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் ஜெய் ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:

மைதான ஊழியர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பும் கடின உழைப்பும் 2023 ஆசிய கோப்பையை தொடரை மறக்க முடியாதவாறு மாற்றியது. தரமான ஆடுகளத்தை அமைத்து மைதானத்தைப் பசுமையாக வைத்திருப்பதன் மூலம் ஆட்டங்கள் தொடர்ந்து நடைபெறுவதை அவர்கள் உறுதிசெய்தார்கள்.

கிரிக்கெட்டின் வெற்றியில் இப்பணியாளர்கள் வகிக்கும் முக்கிய பங்கை இந்த அங்கீகாரம் எடுத்துக்காட்டுகிறது. அவர்களின் மகத்தான சேவைகளை போற்றுவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்