இந்தியா - ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட்: சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கே.எல். ராகுலின் அவுட்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கே.எல். ராகுலுக்கு அவுட் வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெர்த்,
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி பெர்த் மைதானத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பும்ரா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி, ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஜெய்ஸ்வால் மற்றும் படிக்கல் டக் அவுட் ஆகியும், விராட் கோலி 5 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
ஆஸ்திரேலிய பந்துவீச்சை தாக்குப்பிடித்து விளையாடிய கே.எல். ராகுல் 26 ரன்களில் ஆடிக்கொண்டிருந்தபோது ஸ்டார்க் பந்துவீச்சில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
முதலில் கள நடுவர் அவுட் வழங்கவில்லை. நடுவரின் முடிவை எதிர்த்து ஆஸ்திரேலிய அணியினர் அப்பீல் செய்தனர். ரீப்ளேவில் ராகுலின் பேட்டில் பந்து பட்டதற்கான துல்லியமான அறிகுறி ஏதுமில்லை. மேலும் பேட் முதலில் கால் பேடில்படுவதுபோல் தெரிந்தது. ஆனால் பந்து பேட்டை நெருங்கும்போது அல்ட்ரா எட்ஜில் சிறிய அதிர்வு காணப்பட்டதை வைத்து அவுட் என கொடுக்கப்பட்டது. அந்த நேரத்தில் பந்து பேட்டில் பட்டதா அல்லது பேட் முதலில் பேடில் பட்டதா என்பதை கண்டறிய ஹாட் ஸ்பாட் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவில்லை.
இருப்பினும் 3-வது நடுவர் அவுட் என தீர்ப்பளித்தார். இதனால் ராகுல் அதிருப்தியுடன் வெளியேறினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது வரை இந்திய அணி 51 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. பண்ட் 10 ரன்களுடனும், துருவ் ஜூரெல் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.