இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு, தலைமை பயிற்சியாளர் கம்பீரை விமர்சித்த ஆஸி.முன்னாள் வீரர்

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் சூழ்நிலையில் இந்திய அணி இருந்தது என்று பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.;

Update:2025-01-11 19:45 IST

சிட்னி,

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் ஆனது. இதனையடுத்து ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரிலும் தோல்வியை தழுவியது. அதன் காரணமாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாமல் முதல் முறையாக வெளியேறியதுடன் 10 வருடங்கள் கழித்து பார்டர் - கவாஸ்கர் கோப்பையையும் இழந்துள்ளது. இதனால் இந்திய அணியின் வீரர்கள் மீதும், பயிற்சியாளர்கள் மற்றும் தேர்வுக்குழுவின் மீதும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடருக்கு முன்பாக தலைமை பயிற்சியாளர் கம்பீர் தெரிவித்ததை போல் இந்திய அணி செயல்படவில்லை என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் விமர்சித்துள்ளார். மேலும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கரிடம் இந்திய அணியை வெற்றிகரமாக செயல்பட வைக்கும் திட்டங்கள் இல்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "கம்பீர் ஆரம்பத்திலேயே தங்களுடைய வீரர்கள் அதிரடியாக விளையாடுவதற்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சொன்னார். அதே சமயம் டெஸ்ட் போட்டியை டிரா செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அதற்கு தகுந்த தடுப்பாட்டமும் அவர்களிடம் இருப்பதாக கூறினார். ஆனால் அவர் சொன்னது போல் இந்திய அணி இந்த தொடரில் செயல்பட்டதை என்னால் பார்க்க முடியவில்லை.

அதே போல தேர்வு குழுவையும் நீங்கள் பார்க்க வேண்டும். யார் இந்த இந்திய அணியை தேர்ந்தெடுத்தது? குறிப்பிட்ட சூழ்நிலைகளுக்கு தகுந்தாற்போல் யார் அணியை தேர்ந்தெடுக்கிறார்கள். இந்திய அணியை வெற்றிகரமாக வழி நடத்தக்கூடிய நீண்ட கால திட்டம் என்ன? ஏனெனில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவது போல் இந்திய அணி இருந்தது. ஆனால் கடைசியில் அவர்கள் தகுதி பெறவில்லை. அதற்கு காரணம் 2 மாதங்களாக அவர்கள் சுமாராக விளையாடினார்கள்.

எனவே இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவும் வீரர்களை போலவே அழுத்தத்தில் இருக்கிறார்கள். இத்தனைக்கும் கம்பீர் தமக்கு தேவையான துணைப் பயிற்சியாளர்களை தேர்ந்தெடுத்தார். அதே போல சுமாராக விளையாடிய ரோகித் சர்மா, விராட் கோலியையும் அவர் தேர்ந்தெடுத்தார். ஆனால் அந்த இரு வீரர்களும் சிறப்பாக செயல்படவில்லை. அந்த வகையில் பல்வேறு காரணிகள் நீண்ட காலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை கீழே தள்ளி வருகின்றன" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்