பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ள இந்திய பேட்ஸ்மேன்கள் தயாராக உள்ளனர் - ராபின் உத்தப்பா

ஆசிய கோப்பை தொடரில் லீக் சுற்றின் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு சென்றுள்ளன.

Update: 2023-09-08 03:36 GMT

மும்பை,

ஆசிய கோப்பை தொடரில் லீக் சுற்றின் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு சென்றுள்ளன. சூப்பர் 4 சுற்றின் தொடக்க ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி பாகிஸ்தான் முதல் வெற்றியை பதிவு செய்தது.

சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் வரும் 10ம் தேதி கொழும்புவில் பாகிஸ்தானை சந்திக்கிறது. முன்னதாக இதே தொடரில் இலங்கையின் கண்டி நகரில் நடைபெற்ற லீக் போட்டியில் இந்திய அணியை ஆல் அவுட் செய்து பாகிஸ்தான் அணி, ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது.

குறிப்பாக ஹாரிஸ் ராப், ஷாஹீன் அப்ரிடி ஆகியோருக்கு எதிராக ரோகித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஷ் ஐயர், கில் ஆகிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் 66/4 என்ற மோசமான துவக்கத்தை பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே திண்டாடியது. நல்லவேளையாக மிடில் ஆர்டரில் இஷான் கிஷன் மற்றும் ஹர்த்திக் பாண்டியா ஆகியோர் நங்கூரமாக நின்று 138 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 266 ரன்கள் எடுக்க உதவினர்.

இந்நிலையில் வங்காளதேசத்தை முதல் போட்டியில் வீழ்த்தியது தங்களுடைய தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளதாக தெரிவித்த பாபர் அசாம் இந்தியாவுக்கு எதிராக 100% சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வெற்றி காண்போம் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் பாகிஸ்தானிடம் தரமான பவுலிங் இருந்தால் இந்தியாவிடம் தரமான பேட்டிங் இருப்பதாக முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கூறியுள்ளார். இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராபின் உத்தப்பா கூறியதாவது,

அவர்களிடம் வேகம் மற்றும் மிகவும் நுணுக்கங்கள் நிறைந்த சாகின் அப்ரிடி, ஹாரிஸ் ராப் போன்ற பந்து வீச்சாளர்கள் இருக்கின்றனர். இருப்பினும் அதை சமாளிப்பதற்கு நம்மிடமும் தரமான பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர் என்பது உண்மையாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்