தொட்டதெல்லாம் தங்கம்... டிராவிட்டுக்குப்பின் அவரை விட சிறந்த பயிற்சியாளர் இருக்க முடியாது - பாக். முன்னாள் வீரர்

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள டிராவிட்டின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடைய உள்ளது.

Update: 2024-06-20 07:49 GMT

image courtesy: AFP

கராச்சி,

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடைய உள்ளது. மேற்கொண்டு அவர் இந்த பதவியில் தொடர ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில் புதிய தலைமை பயிற்சியாளரை தேர்ந்தெடுப்பதற்கான வேலையை பி.சி.சி.ஐ. தொடங்கியது. இதற்காக பி.சி.சி.ஐ. கவுதம் கம்பீர், விவிஎஸ் லக்ஷ்மன், நெஹ்ரா போன்ற இந்திய முன்னாள் வீரர்களை அணுகியதாக செய்திகள் வெளியானது.

இவர்களில் கவுதம் கம்பீரை அடுத்த பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக செய்திகள் காணப்படுகின்றன. ஏனெனில் 20 மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பைகளை இந்தியா வெல்ல அவர் முக்கிய பங்காற்றினார். மேலும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக 2 கோப்பைகளை கேப்டனாக வென்றுள்ள அவர் இம்முறை ஆலோசகராக செயல்பட்டார். அவருடைய தலைமையில் 10 வருடங்கள் கழித்து கொல்கத்தா கோப்பையை வென்று அசத்தியது.

இந்நிலையில் ராகுல் டிராவிட்டுக்குப் பின் கவுதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்படுவதற்கு மிகவும் சரியானவர் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் தெரிவித்துள்ளார். மேலும் ஜாகீர் கான் அல்லது நெஹ்ராவை பவுலிங் பயிற்சியாளராக நியமிக்கலாம் என்று கூறும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு:-

"கம்பீர் தொட்டதெல்லாம் தங்கமாக மாறியுள்ளது. அவர் இணையும் அணிகள் எல்லாம் வெற்றிகரமாக செயல்படுகின்றன. இந்திய அணிக்கு வெளிநாட்டு பயிற்சியாளர்கள் தேவையில்லை. அவர்களிடம் ஏற்கனவே நிறைய தேர்வுகள் இருக்கின்றன. ராகுல் டிராவிட்டுக்குப்பின் கவுதம் கம்பீரை விட சிறந்த பயிற்சியாளர் இருக்க முடியாது. மிகப்பெரிய வீரரான அவர் சிறந்த பயிற்சியாளராகவும் வருவார். அவர்தான் இந்திய அணிக்கு தற்போது சிறந்த தேர்வாக இருக்கிறார்.

அவருடைய தலைமையில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி நன்றாக விளையாடியது. இந்த வருடம் ஆலோசகராக வந்ததும் அவருடைய தலைமையில் கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வென்றது. மிகச்சிறப்பாக திட்டமிடக்கூடிய அவரிடம் கிரிக்கெட்டை பற்றிய புத்திசாலித்தனமான மனநிலை இருக்கிறது. நானும் அவருடன் நிறைய கிரிக்கெட்டை விளையாடியுள்ளேன். இப்போதும் நண்பர்களாக உள்ள நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். எனவே அவர் இந்திய அணிக்கு பயிற்சியாளராக செயல்பட சிறந்தவர். தேவைப்பட்டால் ஜாகீர் கான் அல்லது ஆஷிஷ் நெஹ்ராவை  இந்தியா பவுலிங் பயிற்சியாளராக நியமிக்கலாம்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்