அகேல் ஹொசைன் அபார பந்துவீச்சு...உகாண்டாவை 39 ரன்களில் சுருட்டி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அபாரமாக பந்துவீசிய அகேல் ஹொசைன் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

Update: 2024-06-09 03:52 GMT

Image Courtesy: @ICC

கயானா,

9-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் தலா ஒரு முறை மோதுகின்றன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.

இந்நிலையில் இந்த தொடரில் கயானாவில் இன்று நடைபெற்ற 18வது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - உகாண்டா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 173 ரன்கள் குவித்தது.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ஜான்சன் சார்லஸ் 44 ரன்கள் எடுத்தார். ரசல் 17 பந்துகளில் 30 ரன்கள் அடித்தார். உகாண்டா தரப்பில் பிரையன் மசாபா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய உகாண்டா அணி வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

உகாண்டா அணியில் ரோகர் முகாசா 0 ரன், சைமன் செசாசி 4 ரன், ராபின்சன் ஒபுயா 6 ரன், அல்பேஷ் ராம்ஜானி 5 ரன், கென்னத் வைஸ்வா 1 ரன், ரியாசத் அலி ஷா 3 ரன், தினேஷ் நக்ரானி 0 ரன், பிரையன் மசாபா 1 ரன், காஸ்மாஸ் கியூட்டா 1 ரன், பிராங்க் நசுபுகா 0 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

இறுதியில் உகாண்டா அணி 12 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 39 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. உகாண்டா தரப்பில் ஜுமா மியாகி 13 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அபாரமாக பந்துவீசிய அகேல் ஹொசைன் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்