ஐபிஎல் தொடரில் 6,000 ரன்கள்...புதிய சாதனை படைத்த டேவிட் வார்னர்...!
ஐபிஎல் தொடரில் 6,000 ரன்களை கடந்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார் டேவிட் வார்னர்.;
கவுகாத்தி,
ஐபிஎல் தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதன் படி மாலை 3.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் ஆடி வருகின்றன. இதில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணி டெல்லியின் பந்துவீச்சை திறம்பட சமாளித்து 199 ரன்கள் குவித்தது.
ராஜஸ்தான் தரப்பில் பட்லர் 79 ரன்னும், ஜெய்ஸ்வால் 60 ரன்னும் எடுத்தனர். இதையடுத்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய டெல்லி அணி தற்போது வரை 13 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றிக்காக போராடி வருகிறது.
இந்நிலையில் இந்த ஆட்டத்தின் டெல்லியின் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய டேவிட் வார்னர் 26 ரன்கள் எடுத்திருந்த போது ஐபிஎல் தொடரில் 6000 ரன்களை கடந்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை படைத்தார். அதுமட்டுமில்லாமல் ஐபிஎல் தொடரில் குறைந்த இன்னிங்ஸ்களில் (165) 6,000 ரன்களை கடந்த வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்திருக்கிறார்.
இந்த பட்டியலில் கோலி (188 இன்னிங்ஸ் ), தவான் (199) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.