இன்னும் 6 ரன்...டி20 கிரிக்கெட்டில் முதல் இந்திய வீரராக விராட் கோலி படைக்கவிருக்கும் சாதனை...!
இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.
பெங்களூரு,
இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. ஏற்கனவே நடைபெற்ற 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிவிட்டது. இன்று நடைபெற உள்ள ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி ஆட உள்ளது.
அதேவேளையில் ஆறுதல் வெற்றிக்காக ஆப்கானிஸ்தான் அணி ஆட உள்ளது. இந்நிலையில் இந்த ஆட்டத்தில் விராட் கோலி 6 ரன்கள் எடுப்பதன் மூலம் மாபெரும் சாதனை ஒன்றினை படைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலக அளவில் அந்த சாதனையை படைக்கப்போகும் நான்காவது வீரராகவும், இந்தியா சார்பில் முதல் வீரராகவும் விராட் கோலி அந்த சாதனையை நிகழ்த்தப்போகிறார். அந்த சாதனை என்னவெனில் இன்றைய ஆட்டத்தில் கோலி 6 ரன்கள் எடுப்பதன் மூலம் ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட் போட்டிகளில் உலக அளவில் 12,000 ரன்களை பூர்த்தி செய்த நான்காவது வீரர் என்பது மட்டுமின்றி இந்திய அளவில் முதல் வீரராகவும் சாதனையை நிகழ்த்துவார்.
இந்த பட்டியலில் முதல் 3 இடங்களில் கிறிஸ் கெயில் 14,562 ரன், சோயிப் மாலிக் 12,993 ரன், கைரன் பொல்லார்டு 12,454 ரன் ஆகியோர் உள்ளனர். இந்திய அளவில் விராட் கோலி 11,994 ரன் முதல் இடத்திலும், ரோகித் சர்மா 11,035 ரன் 2ம் இடத்திலும் உள்ளனர்.