தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 45-1
போட்டியில் முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்க அணி 189 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.;
மெல்போர்ன்,
'பாக்சிங் டே' டெஸ்ட்
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பிரிஸ்பேனில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கியது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் தொடங்கும் இந்த போட்டி 'பாக்சிங் டே' என்ற பாரம்பரிய சிறப்புடன் அழைக்கப்படுகிறது.'டாஸ்' ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் முதலில் தென்ஆப்பிரிக்காவை பேட்டிங் செய்ய பணித்தார். இதன்படி தென்ஆப்பிரிக்காவின் இன்னிங்சை தொடங்கிய கேப்டன் டீன் எல்கரும், சாரல் எர்வீயும் முதல் 10 ஓவர்களை சமாளித்தனர். எர்வீ 18 ரன்னில் கேட்ச் ஆனார். இரண்டு முறை கண்டம் தப்பிய டீன் எல்கர் (26 ரன்) ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு ஓடியபோது லபுஸ்சேனால் சூப்பராக ரன்-அவுட் செய்யப்பட்டார். தனது டெஸ்ட் வாழ்க்கையில் முதல்முறையாக ரன்-அவுட் ஆன எல்கர் முன்னதாக 25 ரன் எடுத்த போது டெஸ்டில் 5 ஆயிரம் ரன்களை கடந்த 8-வது தென்ஆப்பிரிக்க வீரராக சாதனையாளர் பட்டியலில் இணைந்தார். டி புருன் (12 ரன்), பவுமா (1 ரன்), கயா ஜோன்டா (5 ரன்) ஆகியோரும நிலைக்கவில்லை. அப்போது தென்ஆப்பிரிக்கா 67 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
கிரீன் 5 விக்கெட்
இந்த நெருக்கடியான சூழலில் 6-வது விக்கெட்டுக்கு மார்கோ ஜேன்சனும், விக்கெட் கீப்பர் கைல் வெரைனும் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஜேன்சன் 22 மற்றும் 37 ரன்னில் இருந்த போது கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பித்து ஒரு வழியாக தனது முதலாவது அரைசதத்தை பூர்த்தி செய்தார். வெரைனும் அரைசத்தை கடந்தார். இவர்கள் ஆடிய விதத்தை பார்த்த போது 250 ரன்களை நெருங்குவார்கள் என்றே தோன்றியது. ஆனால் இந்த கூட்டணி உடைந்ததும் நிலைமை தலைகீழானது.
ஸ்கோர் 179-ஆக உயர்ந்த போது வெரைன் (52 ரன், 99 பந்து, 3 பவுண்டரி) வேகப்பந்து வீச்சாளர் கேமரூன் கிரீன் பந்து வீச்சில் ஸ்லிப்பில் நின்ற ஸ்டீவன் சுமித்திடம் பிடிபட்டார். அவரது அடுத்த ஓவரில் ஜேன்சனும் (59 ரன், 136 பந்து, 10 பவுண்டரி) வீழ்ந்தார். எஞ்சிய வீரர்கள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை.
முடிவில் தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 68.4 ஓவர்களில் 189 ரன்னில் சுருண்டது. அந்த அணி கடைசி 10 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அண்மை காலமாக பேட்டிங்கில் பெரிய அளவில் சொதப்பி வரும் தென்ஆப்பிரிக்க அணி டெஸ்ட் இன்னிங்சில் தொடர்ச்சியாக 7-வது முறையாக 200-க்குள் அடங்கியுள்ளது. ஆஸ்திரேலிய தரப்பில் கேமரூன் கிரீன் 10.4 ஓவர்கள் பந்து வீசி 3 மெய்டனுடன் 27 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். அவர் இன்னிங்சில் 5 விக்கெட் எடுப்பது இதுவே முதல் முறையாகும். 23 வயதான கேமரூன் கிரீனை ஐ.பி.எல். ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.17½ கோடிக்கு எடுத்தது நினைவு கூரத்தக்கது.
வார்னர் 100-வது டெஸ்ட்
பின்னர் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா களம் புகுந்தனர். டேவிட் வார்னருக்கு இது 100-வது டெஸ்டாகும். இந்த மைல்கல்லை எட்டிய 14-வது ஆஸ்திரேலிய வீரர் இவர் ஆவார்.
கவாஜா 1 ரன்னில் ரபடாவின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனார். வார்னர் நேர்த்தியாக விளையாடி உள்ளூர் ரசிகர்களை குஷிப்படுத்தினார்.
நேற்றைய ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 12 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 45 ரன் எடுத்துள்ளது. வார்னர் 32 ரன்னுடனும் (51 பந்து, 3 பவுண்டரி), லபுஸ்சேன் 5 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது.