2வது டி20 கிரிக்கெட்: 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் (டி.எல்.எஸ் முறை) தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி..!!

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற புள்ளிக்கணக்கில் தென் ஆப்பிரிக்கா அணி முன்னிலை பெற்றுள்ளது.;

Update: 2023-12-12 18:56 GMT

கெபேஹா,

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர், 3 ஒரு நாள் மற்றும் 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது. இதில் டர்பனில் நேற்று முன்தினம் நடக்க இருந்த முதலாவது 20 ஓவர் போட்டி பலத்த மழை காரணமாக டாஸ் கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி கெபேஹா நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் இருவரும் ரன் ஏதுமின்றி அவுட்டாகி வெளியேறினர். அடுத்து வந்த திலக் வர்மா 29 ரன்களில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். அரைசதம் கடந்த சூர்யகுமார் யாதவ், 56 ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்து களமிறங்கி அதிரடி காட்டிய ரிங்கு சிங் 68 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியாக இந்திய அணி 19.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டு முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

 

இதனைத்தொடர்ந்து போட்டி டி.எல்.எஸ். (DLS) முறைக்கு மாற்றப்பட்டு 15 ஓவர்களில் 152 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் தென்ஆப்பிரிக்கா அணியின் சார்பில் ரீஜா ஹென்ரிக்ஸ் மற்றும் மேத்யூ பிரீட்கே ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அதிரடியான ரன் குவிக்கத் தொடங்கிய இந்த ஜோடியில் பிரீட்கே 16 ரன்களில் ரன் அவுட் ஆனார்.

அடுத்ததாக ஹென்ட்ரிக்சுடன், கேப்டன் மார்க்ரம் ஜோடி சேர்ந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இந்த ஜோடியில் மார்க்ரம் 30 ரன்களில் கேட்ச் ஆனார். மறுமுனையில் அதிரடி காட்டி வந்த ஹென்ரிக்சும் 49 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து கிளாசென் 7 ரன்களும், டேவிட் மில்லர் 17 ரன்களும் எடுத்து வெளியேறினர்.   

இறுதியில் பெலுக்வாயோ 10 ரன்களும், டிரிஸ்டான் ஸ்டப்ஸ் 14 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் தென்ஆப்பிரிக்கா அணி 13.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக முகேஷ் குமார் 2 விக்கெட்டுகளும், முகமது சிராஜ், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் டி.எல்.எஸ். முறையில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா அணி வெற்றிபெற்றது.

இதன்படி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற புள்ளிக்கணக்கில் தென் ஆப்பிரிக்கா அணி முன்னிலை பெற்றுள்ளது. மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை (வியாழக்கிழமை) ஜோகன்னஸ்பர்கில் நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்