2வது டி20 போட்டி; ஆப்கானிஸ்தானுக்கு 167 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்த யுஏஇ..!
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி யுஏஇ-யில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது.
ஷார்ஜா,
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி யுஏஇ-யில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற யுஏஇ முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து யுஏஇ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக முகமது வசீம், ஆர்யன் லக்ரா ஆகியோர் களம் இறங்கினர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் வசீம் 53 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
இதையடுத்து களம் இறங்கிய அரவிந்த் 2 ரன், பாசில் ஹமீது 5 ரன், தனிஷ் 11 ரன், அலி நசீர் 6 ரன், ஆர்யன் கான் 1 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இறுதியில் யுஏஇ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. யுஏஇ தரப்பில் ஆர்யன் லக்ரா இறுதிவரை களத்தில் இருந்து 63 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 167 ரன்கள் எடுத்தால் தொடரை கைப்பற்றலாம் என்ற நிலையில் ஆப்கானிஸ்தான் அணி ஆடி வருகிறது.