இன்னும் 2 தான்...கோலியின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ஜிம்பாப்வே வீரர்..!
அயர்லாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.;
ஹராரே,
அயர்லாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் டி20 தொடர் முதலாவதாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.
இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2வது டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் 3 விக்கெட் மற்றும் 65 ரன்கள் எடுத்து ஜிம்பாப்வேயின் வெற்றிக்கு காரணமாக இருந்த கேப்டன் சிக்கந்தர் ராசா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த ஆட்டநாயகன் விருது மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 14-வது முறையாக ஆட்ட நாயகன் விருதை பெற்ற ராசா, ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபியின் சாதனையை (14 முறை ஆட்ட நாயகன் விருது) சமன் செய்துள்ளார். இந்த பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி (15 முறை ஆட்ட நாயகன் விருது) முதல் இடத்தில் உள்ளார்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இன்னும் 2 முறை ஆட்ட நாயகன் விருது பெற்றால் விராட் கோலியின் சாதனையை சிக்கந்தர் ராசா முறியடித்துவிடுவார். சமீபகாலமாக விராட் கோலி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விளையாடாமல் இருப்பதால் இந்த சாதனையை ராசா விரைவில் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.