ஒரே பந்தில் 18 ரன்கள் கொடுத்து தமிழக வீரர் மோசமான சாதனை - வீடியோ

20-வது ஒவரை வீசிய அபிஷேக் தன்வர் ஒரே பந்தில் 18 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார்.;

Update: 2023-06-14 12:12 GMT

7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடி சேப்பாக் அணி வீரர்கள் அதிரடியாக ரன்கள் குவிப்பில் ஈடுபட்டனர்.

இதனால் சேப்பாக் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்தது. இதனைத் தொடர்ந்து 218 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் களமிறங்கிய சேலம் அணியினர் 20 ஒவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 52 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அபார வெற்றிபெற்றது.

இந்நிலையில் சேலம் அணியின் கேப்டன் அபிஷேக் தன்வர் டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் மோசமான சாதனையை படைத்துள்ளார். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங் செய்த போது 20-வது ஒவரை வீசிய அபிஷேக் தன்வர் ஒரே பந்தில் 18 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார்.

20-வது ஓவரின் கடைசி பந்தில் விக்கெட் கிடைத்தது. ஆனால் அது நடுவரால் நோபால் என அறிவிக்கப்பட்டது. மீண்டும் ஒரு நோபால் வீசினார். அது சிக்சர் அடிக்கப்பட்டது. மறுபடியும் நோபாலில் 2 ரன்கள் எடுக்கப்பட்டது. அடுத்து வைடு பந்து வீசினார். மீண்டும் வீசிய பந்தில் சிக்சர் விளாசப்பட்டது. இதன்மூலம் ஒரு பந்தில் 18 ரன்கள் விட்டுக்கொடுக்கப்பட்டது. 20-வது ஓவரில் மொத்தமாக 26 ரன்கள் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்