சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகள்...புதிய சாதனை படைத்த டிம் சவுதி..!

பாகிஸ்தானுக்கு எதிராக நேற்று நடைபெற்ற டி20 போட்டியில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது.

Update: 2024-01-13 03:09 GMT

Image Courtesy: AFP

ஆக்லாந்து,

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. அதன்படி பாகிஸ்தான்- நியூசிலாந்து இடையிலான முதலாவது டி20 ஆட்டம் ஆக்லாந்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடியது.

20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 226 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 227 ரன் என்ற இமாலய இலக்கை நோக்கி பாகிஸ்தான் ஆடியது. நியூசிலாந்தின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாத பாகிஸ்தான் அணி 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 180 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 46 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது.

நியூசிலாந்து தரப்பில் டிம் சவுதி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர் அப்பாஸ் அப்ரிடியை அவுட்டாக்கியபோது டி20 கிரிக்கெட்டில் தனது 150-வது விக்கெட்டை வீழ்த்தினார் சவுதி. இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் 150 விக்கெட்டுகளை பதிவுசெய்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் விவரம்; முதல் இடத்தில் டிம் சவுதி (151 விக்கெட்டுகள்), இவருக்கு அடுத்தபடியாக ஷகிப் அல் ஹசன் (140 விக்கெட்டுகள்) 2ம் இடத்திலும், ரஷித் கான் (130 விக்கெட்டுகள்) 3ம் இடத்திலும், இஷ் சோதி (127 விக்கெட்டுகள்) 4-வது இடத்திலும் உள்ளனர்.



Tags:    

மேலும் செய்திகள்