தில்லை நடராஜரின் திருவடியே இவரது மணிமுடி.. இன்று கூற்றுவ நாயனார் குருபூஜை

கூற்றுவ நாயனார் எப்பொழுதும் அரனாரின் திருநாமத்தை மறவாமல் ஓதியபடியே இருப்பார்.

Update: 2024-08-01 05:37 GMT

தில்லை சிற்றம்பலத்தில் அருள்புரியும் நடராஜப் பெருமானின் திருவடிகளையே திருமுடியாக ஏற்றுக் கொண்ட மன்னர் கூற்றுவ நாயனார். திருக்களந்தை என்னும் ஊரில் களப்பாளர் மரபில் தோன்றியவர் கூற்றுவ நாயனார். போர்க்களத்தில் வெற்றிகள் பல பெற்ற கூற்றுவ நாயனார், பகைவர்களுக்கு கூற்றுவனைப் போல் (எமன்) இருந்ததால் கூற்றுவர் என்று அழைக்கப்பட்டார். பஞ்சாட்சர மந்திரமும், சிவநெறியும் இவர் வாழ் நெறியாகும். எப்பொழுதும் அரனாரின் திருநாமத்தை மறவாமல் ஓதியபடியே இருப்பார். சிவனடியார்களைக் கண்டால் சிவனாகவே எண்ணி அவர்களுக்கு வேண்டியதைச் செய்து கொடுப்பார்.

குறுநில மன்னரான கூற்றுவ நாயனார் தம்முடைய வலிமையால் மூவேந்தர்களையும் வென்று வெற்றி வீரராக விளங்கியபோதும், அவரால் முடியுடை மன்னராக முடியவில்லை. கூற்றுவ நாயனார் இறைவனின் திருக்கோயில்களில் சிறந்த தலமான தில்லையில் முடிசூடிக்கொள்ள ஆர்வம் கொண்டார். அதே சமயத்தில் சோழர்களின் மணிமுடியை தில்லைவாழ் அந்தணர்கள் பாதுகாத்து வந்தனர். ஆதலால் தில்லையை அடைந்த கூற்றுவநாயனார் மணிமுடி சூடிக்கொள்ளும் தம்முடைய விருப்பத்தை தில்லைவாழ் அந்தணர்களிடம் தெரிவித்தார்.அதற்கு தில்லைவாழ் அந்தணர்கள், "சோழப் பரம்பரையில் வரும் மன்னர்களைத் தவிர மற்ற மன்னர்களின் மரபுக்கு மாறாக திருமுடி அணிவிக்க மாட்டோம்." என்று மறுத்து விட்டனர்.

அதேசமயம், சோழ நாட்டினை ஆளும் மன்னனுக்கு முடிசூட மறுத்ததால், அரசனுடைய கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்றும் தில்லை வாழ் அந்தணர்கள் அஞ்சினர். ஆதலால் தம்மில் ஒரு குடும்பத்தாரை மட்டும் தில்லை ஆடலரசனுக்கு வழிபாட்டினை நடத்தவும், சோழ அரசரின் மணிமுடியைப் பாதுகாக்கவும் சோழ நாட்டில் விட்டுவிட்டு ஏனையோர் சேர நாட்டிற்கு புலம் பெயர்ந்தனர்.

'தில்லைவாழ் அந்தணர்கள் எனக்கு திருமுடியைச் சூடாவிட்டாலும், அவர்களுள் முதல்வராகிய ஆடலரசனின் திருவடியை நன்முடியாக சூடிக் கொள்வேன்' என்று எண்ணி அம்பலத்தரசனை, 'நீயே நின் திருவடியை எனக்கு மணிமுடியாக சூட்டி அருள வேண்டும்' என்று மனமுருகி வேண்டிக் கொண்டார். அன்றிரவு கூற்றுவ நாயனார் துயில்கையில் அவர் கனவில் தோன்றிய ஆடலரசன் குஞ்சித பாதத்தை தம்முடைய அடியாரின் விருப்பப்படியே மணிமுடியாகச் சூட்டினார்.

உடனே விழித்தெழுந்த நாயனார் தாம் பெற்ற பேற்றை எண்ணி மகிழ்ந்தார். தில்லைவாழ் அந்தணர்கள் சேர நாடு சென்றதற்கான காரணத்தை அறிந்து 'எதற்கும் அஞ்ச வேண்டாம்' என்று ஓலை அனுப்பி அவர்களை சோழ நாட்டிற்கு மீண்டும் வருவித்தார் கூற்றுவர். இறைவனார் கோயில் கொண்டுள்ள பல திருத்தலங்களுக்கும் சென்று, திருத்தொண்டுகள் செய்து வழிபட்டார். இறுதியில் வீடுபேற்றினை இறையருளால் பெற்றார். கூற்றுவ நாயனார் குருபூஜை ஆடி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் பின்பற்றப்படுகிறது. இந்த ஆண்டு ஆடி மாத திருவாதிரை நட்சத்திரம் இன்று மதியம் 12.48-க்கு தொடங்கி, நாளை மதியம் 12.59 மணிக்கு நிறைவடைகிறது. 

மேலும் ஆன்மிக செய்திகளுக்கு.. https://www.dailythanthi.com/Others/Devotional

Tags:    

மேலும் செய்திகள்