'அன்னதானம்' என்ற பெயரில் தனிநபர், தனியார் அமைப்புகளுக்கு காணிக்கை வழங்க வேண்டாம் - திருமலை-திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவையொட்டி பக்தர்களுக்கு இலவசமாக அன்னப்பிரசாதம் வழங்கப்படுகிறது.;
திருமலை:
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 27-ந்தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 5-ந்தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அதையொட்டி திருமலை-திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு இலவசமாக அன்னப்பிரசாதம் வழங்குகிறது. அன்னதானம் என்ற பெயரில் தனி நபருக்கோ, அமைப்புக்கோ பக்தர்கள் காணிக்கை வழங்க வேண்டாம். திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா நாட்களில் பக்தர்களுக்கு தேவஸ்தானம் இலவசமாக அன்னதானம் வழங்கும்.
எனவே பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருமலையில் அன்னதானம் செய்யப்போவதாகக் கூறி செகந்திராபாத் அனந்தகோவிந்த தாச அறக்கட்டளை சமீபத்தில் பக்தர்களிடம் காணிக்கைகள் கேட்டதை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் கவனித்துள்ளது.
இதற்கான வங்கி கணக்கு எண்ணும் அறக்கட்டளை மூலம் கிடைத்துள்ளது. இந்த அறக்கட்டளைக்கும், திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இதுபோன்ற அமைப்புகள் மற்றும் தனிநபர்களின் வார்த்தைகளை பக்தர்கள் யாரும் நம்ப வேண்டாம். சட்டவிரோதமாக காணிக்கைகள் வசூலிக்கும் அறக்கட்டளைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.