தன் வடிவத்தை விஷ்ணுவுக்கு அளித்த திருமேற்றளீஸ்வரர்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஆலயத்தில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது, பிள்ளையார்பாளையம். இங்கு ‘திருமேற்றளீஸ்வரர் கோவில்’ இருக்கிறது. இந்த ஆலயம் ‘திருக்கச்சிமேற்றளி’ என்றும் அழைக்கப்படுகிறது.;

Update:2023-02-24 21:00 IST

காஞ்சிபுரத்தில் உள்ள ஐந்து பாடல்பெற்ற தலங்களில் (திருக்கச்சியேகம்பம், திருக்கச்சிமேற்றளி, திருவோணகாந்தன்தளி, கச்சி அனேகதங்காவதம், திருக்கச்சிநெறிக் காரைக்காடு) இதுவும் ஒன்று. சிவபெருமானின் தேவாரப் பாடல் பெற்ற 274 தலங்களில் இது 234-வது தேவாரத் தலமாகும். அதே போல் தொண்டை நாட்டு தலங்களில் 2-வது தலமாகவும் போற்றப்படுகிறது.

இந்த ஆலயத்தில் இரண்டு மூலவர் சன்னிதிகள் இருக்கின்றன. பிரதான லிங்கமாக திருமேற்றளீஸ்வரர் திகழ்கிறார். மற்றொரு மூலவரின் திருநாமம், 'ஓதஉருகீஸ்வரர்' என்பதாகும். உற்சவரின் திருநாமம் சந்திரசேகரர். அம்மன் திருமேற்றளி நாயகி என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். இந்த ஆலயத்தில் தல விருட்சமாக மாமரமும், தீர்த்தமாக சிவகங்கை தீர்த்தமும் உள்ளன.

தல வரலாறு

திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருந்த மகாவிஷ்ணுவிற்கு, ஒருநாள் ஒரு எண்ணம் தோன்றியது. அதாவது 'சிவபெருமானின் சிவலிங்க வடிவத்தைப் பெற வேண்டும்' என்று அவர் நினைத்தார். அதற்காக சிவ ரூபம் வேண்டி, ஈசனிடம் முறையிட்டார். ஆனால் சிவபெருமானோ, "இது சாத்தியமில்லை" என்று கூறி ஒதுங்கிக்கொண்டார். அதேநேரம் விஷ்ணுவும் தன் நிலையில் இருந்து விலகுவதாக இல்லை. சிவ ரூபம் பெற்றே தீருவது என்ற முடிவில், அவர் சிவபெருமானை நினைத்து தவம் செய்யத் தொடங்கினார். விஷ்ணுவின் மனஉறுதியைக் கண்டு வியந்த ஈசன், அவருக்கு அருள்புரிய நினைத்தார். பின்னர் "காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கச்சமேற்றளியில் சுயம்புவாக இருக்கும் தன்னை நோக்கி தவம் செய்து வழிபட்டு வந்தால் லிங்க வடிவம் கிடைக்கப்பெறும்" என்று அருள்புரிந்தார். அதன்படி இத்தலம் வந்த மகாவிஷ்ணு, அங்குள்ள தீர்த்தத்தில் நீராடி வேகவதி நதிக்கரையில் சிவனை நோக்கி கிழக்கு பார்த்து நின்ற கோலத்தில் தவம் செய்யத் தொடங்கினார். இந்த நிலையில்தான் சிவ தல யாத்திரையை மேற்கொண்டிருந்த திருஞானசம்பந்தர், இந்த திருத்தலம் வந்தார். அவர் தவக்கோலத்தில் நின்று கொண்டிருப்பது சிவன் என்று நினைத்தார்.

சிவனுக்கு பின்புறத்தில் தூரத்தில் நின்றவாறே, ஈசனை நினைத்து பதிகம் பாடினார். அவரது பாடலில் மனதை பறிகொடுத்த மகாவிஷ்ணு, அப்படியே உருகினார். பாதம் வரையில் உருகிய விஷ்ணுவின் ரூபம் சிவலிங்க வடிவமாக மாறியது. சம்பந்தர் பாடலை முடிக்கும் தருவாயில், அவரது பாதம் மட்டும் அப்படியே நிலைபெற்று விட்டது. தற்போதும் கருவறையில் லிங்கமும், அதற்கு முன்பு பாதமும் இருப்பதைக் காண முடியும். திருஞானசம்பந்தரின் பாடலுக்கு உருகியவர் என்பதால், இவர் 'ஓதஉருகீஸ்வரர்' என்று பெயர் பெற்றார்.

இங்குள்ள சுயம்புவான லிங்கம் மேற்கு திசை பார்த்தபடி உள்ளது. எனவே இவருக்கு 'மேற்றளீஸ்வரர்' (மேற்கு பார்த்த தளி) என்று பெயர். 'தளி' என்பது 'கோவில்' என்ற பொருளைத் தரும். திருமேற்றளீஸ்வரர் தான் இங்கு பிரதானமாக வழிபாட்டு தெய்வம் என்றாலும், கோவிலின் ராஜகோபுரமும், பிரதான வாசலும் ஓதஉருகீஸ்வரருக்கே உள்ளது. இவருக்கு நேர் திசையில் உள்ள நந்திக்குதான் பிரதோஷ காலத்தில் வழிபாடு செய்யப்படுகிறது.

ஓதஉருகீஸ்வரர், தனக்கான கருவறையில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். கருவறையில் சிவவடிவான லிங்கத்தையும், திருமாலின் பாதத்தையும் ஒரே நேரத்தில் தரிசிப்பதால் வாழ்க்கையில் குறைவில்லாத வளத்தைப் பெறலாம் என்பது நம்பிக்கை. திருநாவுக்கரசர் இத்தலத்தை 'கல்வியைக் கரையிலாத காஞ்சி மாநகர் தன்னுள்ளல்..' என்று குறிப்பிட்டு பாடியுள்ளார். எனவே இத்தல இறைவனை வழிபாடு செய்தால், கல்வியில் சிறந்து விளங்கலாம் என்பதும் புலனாகிறது.

காஞ்சிபுரத்தில் உள்ள சிவன் கோவில்களுக்கு, காமாட்சி அம்மனே பிரதானமான அம்பாள். எனவே இங்குள்ள பெரும்பாலான கோவில்களில் அம்பாள் சன்னிதி இருப்பதில்லை. ஆனால் திருமேற்றளீஸ்வரர் கோவிலில் அம்பாள் தனிச் சன்னிதியில் கிழக்கு பார்த்து அருள்பாலிப்பது கூடுதல் விசேஷம். பராசக்தியாக விளங்கும் இந்த அன்னை சாந்தமான கோலத்தில் அருள்கிறாள். கோஷ்டத்தில் உள்ள தட்சிணாமூர்த்தியின் கீழ் இருக்கும் முயலகன், அவருக்கு இடது பக்கமாக திரும்பியிருப்பது வித்தியாசமான கோலம் ஆகும். நூறு ருத்திரர்கள், சீகண்டர், வீரபத்திரர், குரோதர், மண்டலாதிபதிகள் உள்ளிட்ட 116 பேரும், புதனும் வழிபட்ட தலம் இது.

இவ்வாலய ராஜகோபுரம் மூன்று நிலைகளுடன் கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறது. ராஜ கோபுரத்தில் ஒரு புறம் துவார கணபதியும், மறுபுறம் முருகப்பெருமானும் உள்ளனர். ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே நுழைந்தால் நந்தியம்பெருமான், பலிபீடம் உள்ளது. வலது பக்கத்தில் நவக்கிரக சன்னிதி இருக்கிறது. திருமேற்றளிநாதர் கருவறை கோஷ்டத்தில் விநாயகரும், தட்சிணாமூர்த்தியும் உள்ளனர். ஆலயத்தை பிரகார வலம் வரும்போது, விநாயகர், காசி விஸ்வநாதர், பைரவர், நடராஜர் சபையை தரிசிக்கலாம். மேலும் பிரம்மன், துர்க்கை, சண்டேஸ்வரர், வெட்ட வெளியில் ேஜஷ்டாதேவி உருவம் ஆகியவையும் இருக்கின்றன.

தன்னை மனமுருகி வழிபட்ட விஷ்ணுவுக்கு தன் வடிவத்தையே கொடுத்தவர் இத்தல திருமேற்றளீஸ்வரர். எனவே இவரை வணங்கினால், வேண்டிய வரங்கள் கிடைத்திடும் என்பது நம்பிக்கை. பிரார்த்தனை நிறைவேறியவர்கள், இத்தல இறைவனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், நைவேத்தியங்கள் படைத்து, வஸ்திரம் சாத்தி வழிபடுகிறார்கள்.

அமைவிடம்

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் பிள்ளையார்பாளையம் என்னும் இடத்தில் திருமேற்றளித் தெருவில் இந்த சிவன் ஆலயம் அமைந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்