தீ புகும் விழா
பெரும்பாலும் அம்மன் கோவில்களில்தான் தீமிதி விழா என்பது வெகு சிறப்பாக நடைபெறும். அம்மனின் அம்சமாக கருதப்படும் திரவுபதி அம்மன் கோவில்களிலும் தீமிதி விழா என்பது மிகவும் பிரசித்திப் பெற்றது.;
நாம் இதுவரை பார்த்த தீமிதி விழாக்களில் எல்லாம், சுமார் 10 முதல் 15 அடி நீளத்தில் செவ்வக வடிவில் ஒரு சிறிய பள்ளத்தை தோண்டுவார்கள். அதில் மரத்துண்டுகளைப் போட்டு எரித்து, அந்த நெருப்புத் துண்டுகள் தணலாக இருக்கும் வேளையில், அம்மனுக்காக நேர்த்திக் கடன் செலுத்த நேர்ந்து கொண்ட பக்தர்கள், அந்த தீ குண்டத்தின் ஒரு பக்கத்தில் இருந்து மறு பக்கத்திற்கு நடந்து செல்வார்கள். இதனையே 'தீமிதி விழா', 'பூக்குழி இறங்குதல்', 'பூ மிதித்தல்' என்று பல்வேறு பெயர்களில் அழைக்கிறோம்.
கர்நாடக மாநிலத்தின் ஒரு பகுதியில் நடந்த திரவுபதி அம்மன் கோவில் தீமிதி விழாவில், வித்தியாசமான முறையில் பக்தர்கள் தீ மிதித்துள்ளனர். இதனை 'தீமிதி விழா' என்று சொல்வதை விட, 'தீ புகும் விழா' என்று சொல்வதே சரியானதாக இருக்கும். இங்கே படத்தில் நீங்கள் பார்ப்பது போல, ஓரிடத்தில் நீளவாக்கத்தில் அமைந்த பெரிய பெரிய மரக்கட்டைகளை சற்றே சரிந்த நிலையில் நிற்க வைக்கிறார்கள். பின்னர் அதில் நெருப்பை பற்ற வைத்து, அதனை பெரிய தீ ஜூவாலையைப் போல எரிய விடுகிறார்கள். அந்த தீ எரிந்து கொண்டிருக்கும்போதே, பக்தர்கள் அந்த தீக்குள் புகுந்து மறுபக்கம் வந்து தங்களின் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். வழக்கமான நேர்த்திக்கடன்தான்.. ஆனால் கொஞ்சம் வித்தியாசமான முறையில் செலுத்தப்படுகிறது.