கங்கைக்கு நிகரான 'சங்கராபரணி'

தமிழகத்தில் பாயும் பல்வேறு புண்ணிய நதிகளில் குறிப்பிடத்தக்க நதியாக திகழ்வது சங்கரா பரணி ஆறு. சங்கரனுக்கு ஆபரணம் போன்றவள் என்பதால், இந்த நதி ‘சங்கராபரணி’ என்று போற்றப்படுகிறது.;

Update:2022-11-24 15:46 IST

 விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உற்பத்தியாகி புதுச்சேரி கடலில் கலக்கும் இந்த நதியின் கரையில் ஏராளமான திருக்கோவில்கள் அமைந்துள்ளன. அவற்றில் ஒன்றுதான், புதுச்சேரி அருகில் உள்ள கெங்கவராக நதீஸ்வரர் கோவில். இத்தல இறைவனை, அகத்தியா் பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளார்.

சிவன்-பார்வதி திருமணத்தைப் பார்ப்பதற்காக, தேவர்கள், ரிஷிகள் அனைவரும் கயிலாய மலையில் குவிந்தனர். இதனால் வடக்குப் பகுதி தாழ்ந்தும், தென் பகுதி உயர்ந்தும் காணப்பட்டது. உலகை சமநிலைக்கு கொண்டு வருவதற்காக, அகத்தியரை தென்பகுதிக்கு யாத்திரை செல்லும்படி சிவபெருமான் பணித்தார். தான் நினைக்கும் இடத்தில் எல்லாம் திருக்கல்யாண காட்சியை காட்டியருள வேண்டும் என்ற வேண்டுகோளுடன் தென் பகுதிக்கு புறப்பட்டார், அகத்தியர்.

வழியில் இத்தலம் வந்த அகத்தியர், இங்குள்ள சங்கராபரணி ஆற்றில் நீராடி விட்டு, ஈசனின் திருமணக்கோலத்தை தரிசிக்க எண்ணினார். அகத்தியர் தமது திருக்கரங்களால் ஷோடச லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து, ஈசனை தியானித்தார். உடனே சிவபெருமான், உமையவளோடு திருக்கல்யாண காட்சியை அகத்தியருக்கு காட்டியருளினார். முன்னதாக திருக்காஞ்சி அருகே வரும்போது, கிழக்கே புதுச்சேரி கடலில் கலக்கச் செல்லும் சங்கராபரணி ஆற்றை, அகத்தியர் ஈசனை அபிஷேகம் செய்து வழிபடுவதற்காக, வராகப் பெருமாள் தனது கொம்பால் வடக்கு நோக்கி திசை திருப்பினார். இதனால் இந்த நதி 'வராக நதி' என்றும் அழைக்கப்படுகிறது.

பழம்பெருமை வாய்ந்த இந்த ஆலயம் முன் காலத்தில் ஆயிரங்கால் மண்டபத்துடன் விளங்கியுள்ளது. ஒரு முறை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் கோவில் சேதமடைந்தது. இதையடுத்து 200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதுதான், தற்போது இருக்கும் ஆலயம்.

தேவர்களின் குருவான பிரகஸ்பதி, ஒரு முறை பிரம்மனை நோக்கி தவம் புரிந்தார். தன் முன்பாக தோன்றிய பிரம்மனிடம், பிரம்ம கமண்டலத்தை அருளும்படி கேட்டார், பிரகஸ்பதி. அதனை பிரம்மதேவன் கொடுக்க முயலும்போது, கமண்டலத்திற்குள் இருந்த புஷ்கரம் (அமிர்தம்), பிரகஸ் பதியிடம் ெசல்ல மறுத்தது. இதனால் பிரம்மதேவன், பிரகஸ்பதி மற்றும் புஷ்கரத்துடன் ஒரு உடன்படிக்கை ஏற்படுத்தினார். அதன்படி பிரகஸ்பதி என்று அழைக்கப்படும் குரு பகவான், ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குள் நுழையும் முதல் 10 நாட்கள் மற்றும் கடைசி 10 நாட்கள் மட்டும், பிரகஸ்பதியின் கரத்தில் பிரம்ம கமண்டலம் இருப்பது என்று முடிவானது.

அதன்படி 12 ராசிக்குள்ளும் குரு நுழையும் நேரம் மற்றும் வெளியேறும் காலகட்டத்தில், அந்த ராசிக்கு உரிய புனித நதிகளில் புஷ்கரம் தங்கியிருந்து, மக்களுக்கு நன்மை அளிக்கிறது. அந்த வேளையில் நதியில் நீராடும் மக்களின் பாவங்கள் நீங்கும். 12 ராசிகளுக்குள்ளும் குரு நுழையும் வேளையில் 'புஷ்கரம்' என்ற நிகழ்வு நடைபெறும். ஒரு நதியில் நடைபெறும் புஷ்கரம், அதே நதியில் மீண்டும் நடைபெற 12 ஆண்டுகள் ஆகும். அந்த வகையில் அடுத்த ஆண்டு (2023) மேஷ ராசிக்கு, குரு பகவான் செல்கிறார். இதற்குரிய புஷ்கரம் நிகழ்வு கங்கை நதியில் கொண்டாடப்பட உள்ளது. அதே நேரம் கங்கை நதிக்கு நிகரான சங்கராபரணி நதியிலும் இந்த புஷ்கரம் விழா நடத்தப்பட இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் புதுச்சேரி மாநில இந்துசமய அறநிலையத்துறை சார்பில் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வு வருகிற ஏப்ரல் மாதம் 19-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை சங்கராபரணி ஆற்றில் நடைபெறும். புஷ்கரம் நடைபெறும் 12 நாட்களும், சங்கராபரணி நதிக்கு சிறப்பு யாகமும், கங்கா ஆரத்தியும் நடைபெற உள்ளது.

பூவாக மாறிய அஸ்தி

முன்பொரு காலத்தில் பக்தர் ஒருவர், தனது உறவினரின் அஸ்தியை காசியில் கரைக்க எடுத்துச் செல்லும் போது, திருக்காஞ்சி தலத்துக்கு வந்து ஈசனை வழிபட்டார். அப்போது, அவர் வைத்திருந்த அஸ்தி பூவாக மாறியுள்ளது. பிறகு அங்கிருந்து அவர் காசிக்கு சென்றவுடன் மீண்டும் அஸ்தியாக மாறியுள்ளது. உடனே அஸ்தியை காசியில் கரைக்காமல் மீண்டும் திருக்காஞ்சிக்கு வந்தார். அப்போது அஸ்தி மீண்டும் பூவாக மாறியது. இதனால் ஆச்சரியமடைந்த பக்தர் ஈசனை நோக்கி வழிபடும் போது, இது 'காசிக்கு நிகரான தலம்' என ஒரு அசரீரி கேட்டது. மேலும் காசியில் அன்னபூரணி, விசாலாட்சி என 2 அம்மன்கள் இருப்பது போல், திருக்காஞ்சியிலும் ஈசனுக்கு, காமாட்சி, மீனாட்சி என 2 அம்மன்கள் உள்ளனர். காசியில் வழிபட்டால் கிடைக்கும் பலன், இத்தலத்தில் வழிபட்டாலும் கிடைக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்