ராமநாதபுரம்: ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம்
ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்காவில் நடைபெற்ற 848-வது சந்தனக்கூடு திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.;
ராமநாதபுரம் மாவட்டம்,ஏர்வாடி மகான் குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்ஹாவில் ஆண்டு தோறும் சந்தனக்கூடு திருவிழா மதநல்லிணக்க ஒருமைப்பாட்டு விழாவாக ஏர்வாடி தர்ஹா பொது மகாசபை உறுப்பினர்கள் (ஹக்தார்) நடத்தி வருகின்றனர்.
இந்த விழாவிற்கு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்ட்ரா போன்ற பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கானவர்கள் வந்து கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டுக்கான திருவிழா ஜூன் 1-ந்தேதி மவுலீதுடன் (புகழ்மாலை) தொடங்கியது.
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் தர்கா மண்டபத்திற்கு எதிரே உள்ள கொடிமரம் மேடையில் அடிமரம் ஏற்றப்பட்டது .நேற்று மாலை ஏர்வாடி குடியிருப்பில் உள்ள முஜாபிர் நல்ல இபுராகிம் லெவ்வை மகாலில் இருந்து மாலை கொடி ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக தர்கா வந்தடைந்தது.
அலங்கார ரதம் தர்காவில் மூன்று முறை வலம்வந்த பின்னர் மாலை பக்தர்களின் நாரே தக்பீர் முழக்கத்துடன் கொடி ஏற்றப்பட்டது. முன்னதாக தர்கா மண்டபத்தில் பக்தர்கள் ஒன்றிணைந்து மவுலீது ஒதீனர். இதைத் தொடர்ந்து செய்யது பாருக் ஆலிம் மத நல்லிணக்கம் தொடரவும், உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன்,நோய் நொடி இல்லாமல் வாழவும் சிறப்பு பிரார்த்தனை செய்தார்.
ராமநாதபுரம் போலீஸ் கண்காணிப்பாளர் கார்த்திக் உத்தரவின் பேரில் கீழக்கரை துணை போலீஸ் கண்காணிப்பாளர் சுபாஷ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக ஜூன் 23-ந் தேதி மாலை சந்தனக்கூடு திருவிழா ஆரம்பிக்கப்பட்டு ஜூன் 24-ந் தேதி அதிகாலை தர்காவிற்கு சந்தக்கூடு வந்தடையும். பின்னர் பாதுஷா நாயகத்தின் மக்பராவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறும். ஜூன் 30-ந் தேதி கொடியிறக்கத்துடன், பக்தர்களுக்கு நேர்ச்சி வழங்கப்பட்டு விழா நிறைவடைகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை தலைவர் பாக்கிர் சுல்தான், செயலாளர் சிராஜுதீன், உப தலைவர் சாதிக் பாட்ஷா ஏர்வாடி தர்ஹா ஹக்தார் நிர்வாக சபையினர் செய்து வருகின்றனர்.