ராமநாதபுரம் ஐயப்பன் ஆலயம்

ராமநாதபுரம் பஸ்நிலையத்தில் இருந்து தேவிப்பட்டினம் செல்லும் சாலையில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, ராமநாதபுரம் ஐயப்பன் கோவில்.;

Update:2023-07-21 20:33 IST

இந்த ஆலயம் தமிழகத்தின் சபரிமலையாகத் திகழ்கிறது. சபரிமலை ஐயப்பன் கோவில் அமைப்பில் கட்டப்பட்ட இந்தக் கோவில் இரண்டு அடுக்குகளாக அமைந்திருக்கிறது. மேல் பகுதியில் ஐயப்பன் பாலகனாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். பஞ்சலோகத்தால் ஆன இவரது சிலை, கேரளத்தில் செய்யப்பட்டது என்கிறார்கள். இவரது சன்னிதி முன்பாக 18 படிகளும், அரு கில் புலி வாகனமும் உள்ளது. படியின் அருகில் கடுத்த சாமி, கருப்பண்ண சாமி, கருப்பாயி ஆகியோர் காவல் தெய்வங்களாக வீற்றிருக்கின்றனர். சன்னிதியின் வலதுபுறம் கன்னிமூல கணபதியும், இடதுபுறம் மாளிகைப்புற அம்மன் சன்னிதிகளும் இருக்கின்றன.

சபரிமலை நடை திறக்கும் நாட்களிலேயே இங்கும் பூஜைகள் நடத்தப்படுகின்றன. கேரளாவில் ஆறாட்டு உற்சவத்திற்கு செல்வது போலவே, இங்குள்ள சுவாமி கையில் வில், அம்புடன் இருக்கிறார். கோவில் திறப்பின் போது, 18 படிகள் மீதும் கவசம் வைத்து, பட்டுத்துணி போர்த்துவார்கள். பின்னர் உண்ணியப்பம், அரவனை படைத்து மலர் அலங்காரத்துடன் படி பூஜை செய்வார்கள். மகரஜோதி அன்று திருவாபரண பெட்டி ஊர்வலம், ஜோதி தரிசனம் நடைபெறும். சித்திரை பிறப்பன்று விஷூ கனி காணும் நிகழ்வும் நடத்தப்படுகிறது.

இந்த ஆலயத்தில் பாலகன், பூரணையுடன் குடும்பஸ்தன், பிரம்மச்சாரியாக இருகால்களையும் மடக்கி ஆசனத்தில் உள்ள யோக நிலை என்று மூன்று கோலத்தில் ஐயப்பனை நாம் தரிசிக்கலாம். பத்து கைகளுடன் உள்ள தசபுஜ ஐயப்பன் சிலையும் இங்கு உள்ளது. இவர் கைகளில் சக்கரம், புல்லாங்குழல், வில், அம்பு, திரிசூலம், சுத்தி ஏந்தியிருக்கிறார். ஐயப்பனை மணம் புரிய விரும்பிய, மஞ்சள் மாதாவுக்கும் சன்னிதி உள்ளது. திருமணத் தடை உள்ளவர்கள் இங்கு வந்து மஞ்சள் பொடி தூவி வழிபடுகின்றனர். இங்குள்ள ஐயப்பனின் கழுத்தில் மணி கட்டுவதாக வேண்டிக் கொண்டால், அவர்களின் வீட்டில் மழலைக் குரல் விரைவில் கேட்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்