இறையருள் மிகுந்த சங்கு
ஆலய வழிபாடுகளில் சங்கநாதம் எழுப்பும் மரபு இருந்திருக்கிறது. சுப நிகழ்வுகளின் போதும், அரச விழாக்களிலும், போரின் வெற்றி முழக்கமாவும் சங்கை ஒலிக்க விட்டிருக்கிறார்கள்.
தேவர்களும், அசுரர்களும் இணைந்து அமிர்தம் கிடைப்பதற்காக, திருப்பாற்கடலைக் கடைந்தனர். அப்போது கடலுக்குள் இருந்து ஏராளமான தெய்வீகப் பொருட்கள் வெளிப்பட்டன. மகாலட்சுமி, தன்வந்திரி பகவான் போன்றவர்களும், அதில் இருந்துதான் வெளிப்பட்டார்கள். இதில் மகாலட்சுமியுடன் தோன்றிய பெருமைக்குரியது, சங்கு. வலம்புரி சங்கு, இடம்புரி சங்கு, போர் சங்கு, பால் சங்கு, கீற்று சங்கு, சிலந்தி சங்கு, சலஞ்சலம் என சங்கில் பல வகை உண்டு.
ஆலய வழிபாடுகளில் சங்கநாதம் எழுப்பும் மரபு இருந்திருக்கிறது. சுப நிகழ்வுகளின் போதும், அரச விழாக்களிலும், போரின் வெற்றி முழக்கமாவும் சங்கை ஒலிக்க விட்டிருக்கிறார்கள். சங்குகளில் முதன்மையானதாக பாஞ்சஜன்யம் திகழ்கிறது. மகாபாரதத்தில் கண்ணபிரான் வைத்திருந்த சங்கு இது என்கிறது, புராணம். கிருஷ்ணருக்கு குருவாக திகழ்ந்தவர், சாந்தீபனி என்ற முனிவர். இவரது மகனை பாஞ்சஜன்யன் என்ற அசுரன் சிறைபிடித்து, கடலுக்குள் வைத்திருந்தான். அந்த அசுரனை கிருஷ்ணர் வதம் செய்தாா். அவன் சாகும் தருவாயில் கேட்டுக்கொண்டதன் போில், அவனது சாம்பலைத் திரட்டி சங்காக மாற்றி, பாஞ்சஜன்யம் என்ற பெயரிலேயே தாங்கிக்கொண்டார் என்கிறது பாகவத புராணம்.
பாஞ்சஜன்யம் என்பது கடலில் கிடைக்கும் ஒரு வகை சங்கு என்றாலும், அது அவ்வளவு எளிதாகக் கிடைப்பதில்லை. ஆயிரம் சிப்பிகள் உருவாகும் இடத்தில் ஒரு இடம்புரி சங்கு கிடைக்குமாம். ஆயிரம் இடம்புரி சங்குகள் விளையும் இடத்தில் ஒரே ஒரு வலம்புரி சங்கு உருவாகுமாம். வலம்புரி சங்குகள் ஆயிரக்கணக்கில் எங்கு இருக்கிறதோ, அங்கே அரிதாக சலஞ்சலம் என்ற சங்கு இருக்குமாம். சலஞ்சலம் சங்கு பல்லாயிரக்கணக்கில் உற்பத்தியாகும் இடத்தில், அரிதிலும் அரிதாக பாஞ்சஜன்ய சங்கு கிடைக்கும் என்கிறார்கள். 'பிரணவம்' என்னும் 'ஓம்' என்ற ஓசையை வெளிப்படுத்தும் இயற்கை வாத்தியமாக சங்கு இருக்கிறது. அந்த பிரணவ ஒலியை, அட்சரம் பிசகாமல் ஒலிப்பது பாஞ்சஜன்ய சங்கு மட்டுமே என்பது ஆன்மிக சான்றோர்கள் கூறும் கருத்து.
கிருஷ்ணர் பாஞ்சஜன்ய சங்கை வைத்திருந்ததுபோல, பாண்டவர்கள் ஒவ்வொருவரும் ஒரு சங்கை வைத்திருந்தனர். தர்மனிடம் 'அனந்த விஜயம்' என்ற சங்கும், பீமனிடம் 'பவுண்டரம்' என்ற சங்கும், அர்ச்சுனனிடம் 'தேவதத்தம்', நகுலனிடம் 'சுகோஷம்', சகாதேவனிடம் 'மணிபுஷ்பகம்' என்ற சங்கும் இருந்துள்ளன.
வலம்புரிச் சங்கு கொண்டு அபிஷேகம் செய்தால், ஏழு பிறவிகளில் செய்த பாவங்களும் நீங்குமாம். ஆலயங்களில் பிரதான சங்காக வலம்புரிச் சங்கு இடம் பெறும். அந்த சங்கின் அமைப்பு, பிரணவத்தை உணர்த்துகிறது. வலம்புரி கணபதியின் தும்பிக்கையைப் போல் தோற்றம் அமைந்திருக்கும். பாஞ்சஜன்ய சங்கிற்குப் பிறகு, பிரணவ ஒலியை சுத்தமாக எழுப்பும் சங்காக, வலம்புரி சங்கு இருக்கிறது. சிவபெருமானை வழிபடும் பூஜைகளில் சங்கு பூஜை முக்கிய இடத்தைப் பெறுகிறது. திருக்கோவில்களில் விசேஷ காலங்களில் இறைவனுக்கு சங்காபிஷேகம் காலங்காலமாக நடைபெற்று வருகிறது.