ஓவியத்தில் இருந்து வெளிப்பட்ட விநாயகர்
கேரளா மாநிலம் மதானந்தேஸ்வரர் ஆலயத்தில் சிவபெருமான் கருவறையின் தெற்கே இந்த விநாயகர் சன்னிதி இருக்கிறது.இந்த ஆலயத்தின் பிரதான பிரசாதமாக ‘அப்பம்’ இருக்கிறது.;
கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டம் மதுர் என்ற இடத்தில் அமைந்துள்ளது, மதானந்தேஸ்வரர் ஆலயம். மதுவாகினி ஆற்றின் கரையில் இருக்கும் இந்த ஆலயத்தின் முதன்மை தெய்வம் மதானந்தேஸ்வரர் என்ற பெயரில் அழைக்கப்படும் சிவபெருமான்தான். 'மதானந்தேஸ்வரர்' என்பதற்கு, 'காமம், ஆசையைக் கொன்ற கடவுள்' என்று பொருள். சிவபெருமானின் கருவறைக்குள், பார்வதி தேவியும் வீற்றிருக்கிறார். கோவிலின் முதன்மை தெய்வமாக சிவபெருமான் இருந்தாலும், இந்த ஆலயத்தின் முக்கியத்துவம் உள்ள தெய்வமாக சித்தி விநாயகர் உள்ளார். சிவபெருமான் கருவறையின் தெற்கே இந்த விநாயகர் சன்னிதி இருக்கிறது.
இங்கு ஆரம்ப காலத்தில் மதானந்தேஸ்வரர் கோவில் மட்டுமே இருந்தது. துளு மொகர் சமூகத்தைச் சேர்ந்த மதரு என்ற மூதாட்சி, சுயம்பு லிங்கம் ஒன்றை கண்டெடுத்ததன் பேரில் இந்த ஆலயம் அமைக்கப்பட்டதாக தல வரலாறு சொல்கிறது. இந்த ஆலயத்தின் கருவறை தெற்கு சுவரில், ஒரு சிறுவன் விளையாட்டாக பிள்ளையார் உருவம் ஒன்றை வரைந்தான். அந்த ஓவியமானது நாளுக்கு நாள் பெரியதாகவும், புடைப்பாகவும் மாறியது.
இந்த ஆலயம் யானையின் பின்புறத்தை போன்ற அமைப்புடன் (கஜபிருஷ்ட வடிவம்) கட்டப்பட்டுள்ளது. மூன்று அடுக்கு நிலைகளைக் கொண்டதாக ஆலயம் அமைந்திருக்கிறது. ஆலயத்தைச் சுற்றிலும் ராமாயணக் காட்சிகளை சித்தரிக்கும் வகையில் அழகிய மர வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தக்கோவில் துளு நாட்டின் பாரம்பரிய ஆறு பிள்ளையார் கோவில்களில் ஒன்று என்று சொல்லப்படுகிறது. மங்களூர் (ஷரவு மகாகணபதி), அனேகுடே, ஹத்தியங்கடி, இடகுஞ்சி, கோகர்ணா ஆகிய இடங்களில் உள்ளவை மற்ற ஐந்து கோவில்களாகும்.
இந்த ஆலயத்தின் பிரதான பிரசாதமாக 'அப்பம்' இருக்கிறது. இந்த அப்பம் ஒவ்வொரு நாளும் இறை வழிபாட்டிற்காக தயாரிக்கப்படுகிறது. ஆலயத்தில் நடைபெறும் சிறப்பு பூஜைகளின் போது, 'சகஸ்ரப்பா' (ஆயிரம் அப்பங்கள்) இறைவனுக்கு படைக்கப்பட்டு வழிபாடு செய்யப்படும். இந்த அப்பம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். ஆலயத்தின் மற்றொரு சிறப்பு பூஜை 'மூடப்ப சேவை.' இந்த வழிபாட்டில், விநாயகரின் சிலை முழுவதையும் அப்பங்களால் மூடுகின்றனர்.
காசர்கோடு நகரில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, மதுர் திருத்தலம்.