உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி தரும் கிரிவலம்

பிரம்ம முகூர்த்தத்தில் கிரிவலம் வந்தால் நாம் விரும்பும் சித்திகள் நம்மை வந்தடையும், நள்ளிரவில் கிரிவலம் வந்தால் அஷ்டமா சித்திகள் அனைத்தும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

Update: 2024-06-06 06:05 GMT

கிரிவலம் என்பது புனித மலையாக கருதும் மலையையோ அல்லது கோவில் அமைந்த மலையையோ வலம் வந்து வழிபடுவதாகும். அதாவது 'கிரி' என்றால் 'மலை', 'வலம்' என்றால் 'மெதுவாக மலையை சுற்றுதல்' என்று பொருள்.

தமிழ்நாட்டில் இவ்வாறு பல இடங்களில் பெரும்பாலும் பவுர்ணமி நாளன்று கிரிவலம் நிகழ்வு நடந்தாலும், திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரரை பக்தர்கள் பக்தியோடு சுற்றி வரும் நிகழ்வு மிகவும் சிறப்பு வாய்ந்தது. அங்கு பல சித்தர்களின் ஜீவ சமாதிகள் இருப்பதாகவும், இதனால் அம்மலையில் சக்தி அதிர்வலைகள் அதிகமாக காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் மலையைச் சுற்றும்போது இறை அருளும், மகான்களின் ஆசியும் கிடைக்கின்றன என்பது பக்தர்களின் நம்பிக்கை. குறிப்பாக, பவுர்ணமியன்று வலம் வருவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பிரம்ம முகூர்த்தத்தில் கிரிவலம் வந்தால் நாம் விரும்பும் சித்திகள் நம்மை வந்தடையும். நள்ளிரவில் கிரிவலம் வந்தால் அஷ்டமா சித்திகள் அனைத்தும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

கிரிவலம் செல்லும்போது வேகமாக செல்லாமல், ஒரு ஒன்பது மாத கர்ப்பிணி பெண், கையில் விளக்கு வைத்து பொறுமையாக எப்படி நடந்து வருவாரோ? அப்படி வர வேண்டும். அதாவது, அமைதியாய், ஆனந்தமாய் எப்படி தன் வயிற்றில் உள்ள குழந்தையை பத்திரமாக காப்பாற்ற வேண்டும் என நினைத்து, பயபக்தியுடன் நடந்து வருவார்களோ, அது போன்று நடந்து வர வேண்டும்.

இறை நினைவுடன் இறை மந்திரத்தை ஜெபித்தவாறு வலம் வாருங்கள். பொழுது போக்காகவோ, நட்பு உறவுகளுடன் அரட்டை அடித்தவாறோ, சுற்றுலா செல்வது போன்ற மனப்பான்மையுடனோ செல்லாதீர்கள். ஜோதி வடிவாய் ஒளிரும் அந்த சிவனே மலையாக அங்கே நிற்கிறார் என்ற உணர்வுடன் வலம் வாருங்கள்.

ஆண்களாக இருந்தால், மேலாடை இல்லாமல் கிரிவலம் செல்வது நல்லது. மேலும், பட்டு அல்லது கதர் ஆடையை அணிந்து கிரிவலம் வந்தால், நல்ல ஆற்றலை பெற முடியும்.

கிரிவலம் செல்வதால் பாவங்கள் அனைத்தும் நீங்கும் சித்தர்களின் அருளானது கிடைக்கும். ஆன்மிக நன்மைகளை தாண்டி, மன அழுத்தம், கவலைகள் குறைந்து, உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறும். கிரிவலம் செல்வதால் கால்களில் உள்ள நரம்புகள் தூண்டப்பட்டு, களைப்பு நீங்கி, உடல் ஆரோக்கியம் மேம்படும். கிரிவலத்தின்போது நடைப்பயிற்சி அதிகரிப்பதால், உடல் எடை குறைய வாய்ப்புண்டு.

Tags:    

மேலும் செய்திகள்