மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் கடல்-ஆற்றில் கரைக்கப்பட்டன

மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, கடலிலும், தாமிரபரணி ஆற்றிலும் கரைக்கப்பட்டன;

Update:2022-09-05 02:16 IST

விக்கிரமசிங்கபுரம்:

மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, கடலிலும், தாமிரபரணி ஆற்றிலும் கரைக்கப்பட்டன.

விக்கிரமசிங்கபுரம்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, விக்கிரமசிங்கபுரம் பகுதியில் இந்து முன்னணி சார்பில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. அதன்படி விக்கிரமசிங்கபுரத்தில் 15 சிலைகளும், கல்லிடைக்குறிச்சியில் 17 சிலைகளும், அம்பையில் 12 சிலைகளும், சேரன்மாதேவியில் ஒரு சிலையும் அமைக்கப்பட்டது.

நேற்று அனைத்து சிலைகளையும் தனித்தனி வாகனங்களில் ஏற்றி விக்கிரமசிங்கபுரம் சிவந்திபுரத்துக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து அங்கு சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் விநாயகர் சிலைகள் ஊர்வலம் தொடங்கியது.

இந்து முன்னணி மாவட்ட செயலாளர் நாகராஜன் தலைமையில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இசக்கிமுத்து, ஒன்றிய துணைத்தலைவர் மில்லர் முன்னிலையில், மணிமுத்தாறு பேரூராட்சி முன்னாள் தலைவர் சிவன் பாபு கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

விநாயகர் சிலைகளை வாகனங்களில் ஊர்வலமாக கொண்டு சென்று பாபநாசம் கோவில் முன்புள்ள தாமிரபரணி ஆற்றில் கரைத்தனர். இந்து முன்னணி நகர தலைவர் முருகன், கோட்ட தலைவர் தங்கமனோகர், மாவட்ட துணைத்தலைவர்கள் பால்ராஜ், ஆறுமுகம் கார்த்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சிறப்பு பூஜை

இதேபோன்று இந்து முன்னணி சார்பில், ராதாபுரம், வள்ளியூர், களக்காடு, நாங்குநேரி பகுதிகளில் 120 விநாயகர் சிலைகள பிரதிஷ்டை செய்து சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று அனைத்து விநாயகர் சிலைகளையும் வாகனங்களில் ஏற்றி, திசையன்விளை அடைக்கலம்காத்த விநாயகர் கோவில் அருகில் கொண்டு வந்தனர்.

திசையன்விளை தம்புலிங்கேஷ்வரர் கோவில் நிர்வாகி சரவணன் தலைமையில், பா.ஜனதா மாநில பொதுக்குழு உறுப்பினர் பால்சாமி, மாநில மகளிரணி துணைத்தலைவர் கனி அமுதா முன்னிலையில், தமிழ்நாடு டெக்கரேட்டர் நலச்சங்க மாநில அவைத்தலைவர் பொன்ராஜ் கொடியசைத்து விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். திசையன்விளை மெயின் பஜார், இடையன்குடி வழியாக விநாயகர் சிலைகளை ஊர்வலமாக உவரிக்கு கொண்டு சென்று கடலில் கரைத்தனர். ஏற்பாடுகளை திசையன்விளை நகர இந்து முன்னணி தலைவர் ஜெயசீலன், செயலாளர் மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

களக்காடு

இதேபோல களக்காடு பகுதியில் அனைத்து சமுதாய விநாயகர் சதுர்த்தி விழா குழுவினர் சார்பில் 20 விநாயகர் சிலைகளும், இந்து முன்னணி சார்பில் 10 விநாயகர் சிலைகளும், அகில பாரத இந்து மகா சபா சார்பில் 12 விநாயகர் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

விநாயகர் சதுர்த்தி குழு, இந்து முன்னணி சார்பில் அமைக்கப்பட்ட 30 விநாயகர் சிலைகளையும் நேற்று வாகனங்களில் ஏற்றி, களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோமதி அம்பாள் கோவிலுக்கு கொண்டு வந்தனர். பின்னர் அங்கிருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலம் புறப்பட்டது. பா.ஜ.க அரசாங்க தொடர்பு பிரிவு மாநில துணைத்தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி பிச்சம்மாள் கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

இதேபோன்று அகில பாரத இந்து மகாசபா சார்பில் அமைக்கப்பட்ட 12 விநாயகர் சிலைகளையும் வரதராஜபெருமாள் கோவில் முன்பு கொண்டு வந்தனர். அங்கிருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலம் தொடங்கியது. அகில பாரத இந்து மகாசபா மாநில பொதுச்செயலாளர் முத்தப்பா தலைமையில், மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். விநாயகர் சதுர்த்தி குழு, இந்து முன்னணி சார்பில் அமைக்கப்பட்ட சிலைகளை உவரி கடலிலும், இந்து மகாசபா சார்பில் அமைக்கப்பட்ட சிலைகளை பாபநாசம் தாமிரபரணி ஆற்றிலும் கரைத்தனர்.

வள்ளியூர்

வள்ளியூர், பணகுடி, பழவூர், ஏர்வாடி, திருக்குறுங்குடி உள்ளிட்ட பகுதிகளில் 26 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இந்த விநாயகர் சிலைகளை நேற்று வாகனங்களில் ஏற்றி, வள்ளியூர் முருகன் கோவில் முன்பு கொண்டு வந்தனர். பின்னர் அங்கிருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலம் தொடங்கியது.

இந்து முன்னணி மாவட்ட பொருளாளர் பரமசிவம் தலைமையில், முத்தையா சுவாமிகள் கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். விநாயகர் சிலைகளை ஊர்வலமாக உவரிக்கு கொண்டு சென்று கடலில் கரைத்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், வைத்தியலிங்கம், வள்ளியூர் நகர செயலாளர் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விநாயகர் சிலைகள் ஊர்வலத்தையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்