நாளை மகா தீபம்... திருவண்ணாமலையில் குவியும் பக்தர்கள்...!

கார்த்திகை தீப தரிசனம் காண சுமார் 50 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.;

Update:2023-11-25 11:43 IST

திருவண்ணாமலை, 

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இவ்விழாவை காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பஞ்ச ரதங்களின் தேரோட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து விழாவின் 8-ம் நாளான நேற்று, விநாயகர் மற்றும் சந்திரசேகரர் வெட்டும் குதிரையில் வீதி உலா வந்தனர்.

மேலும் இன்று 9 - ம் நாள் திருவிழா நடைபெறுகிறது. கார்த்திகை தீபத் திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியான தீப தரிசன நாளான நாளைய தினம் அதிகாலை 4 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோவில் கருவறைக்கு முன்பு பரணி தீபம் ஏற்றப்படும். மாலை 6 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் தீப தரிசன மண்டபத்தில் எழுந்தருள, ஆண்டுக்கு 5 நிமிடங்கள் மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் ஆனந்த தாண்டவம் ஆடியபடி வந்த பின்பு 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.

இந்த தீபமானது மிகப்பெரிய கொப்பரையில் ஏற்றப்படும். இந்த கொப்பரையானது இன்று மலையின் உச்சிக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. அதற்காக அதிகாலையிலேயே கொப்பரைக்கு மிகப்பெரிய பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் பூஜை முடிந்தவுடன் பக்தர்களின் ஆரவாரங்களுடன் மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த நிலையில் கார்த்திகை தீப தரிசனம் காண சுமார் 50 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் செய்துள்ளனர். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புரையின்படி, தீபத்திருநாளான நாளை 2,500 பக்தர்கள் மட்டும் அண்ணாமலையார் மலை மீது ஏற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மலை ஏறும் பக்தர்கள் தண்ணீர் பாட்டில் மட்டுமே எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மேலும், காலி தண்ணீர் பாட்டில்களை மலையிலிருந்து இறங்கி வரும்போது திரும்ப கொண்டு வர வேண்டும். மலை ஏறும் பக்தர்கள் கற்பூரம், பட்டாசு மற்றும் எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதியில்லை, என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. பக்தர்களின் வருகைக்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.   

Tags:    

மேலும் செய்திகள்