அந்தியூர் அருகே சக்தி மாரியம்மன் கோவிலில் விழா:பக்தர்கள் வினோத வழிபாடு

அந்தியூர் அருகே சக்தி மாரியம்மன் கோவிலில் நடந்த விழாவில் பக்தர்கள் வினோத வழிபாட்டில் ஈடுபட்டனர்.

Update: 2023-04-11 21:30 GMT

அந்தியூர்

அந்தியூர் அருகே சக்தி மாரியம்மன் கோவிலில் நடந்த விழாவில் பக்தர்கள் வினோத வழிபாட்டில் ஈடுபட்டனர்.

சக்தி மாரியம்மன் கோவில்

அந்தியூர் அருகே எண்ணமங்கலம் விராலி காட்டூரில் பிரசித்தி பெற்ற சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பொங்கல் விழா கடந்த மாதம் 29-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து கோவிலில் கம்பம் நடும் நிகழ்ச்சியும், கொடியேற்றம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதையடுத்து தினமும் ஏராளமான பக்தர்கள், கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வழிபட்டனர். மேலும் தினமும் கம்பத்தை சுற்றி ஆண் பக்தர்கள் ஆட்டம் ஆடி வந்தனர்.

வயிற்றில் அக்னி சட்டி...

இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த சேதுபதி என்ற பக்தர் வயிற்றில் அக்னி சட்டி எடுத்து படுத்தபடி கோவிலை வலம் வந்தார். மற்றொரு பக்தரான பாலு என்பவர் வயிற்றில் மத்தளத்தை வைத்து வாசித்தப்படி படுத்துக்கொண்டே நகர்ந்து கோவிலை 3 முறை சுற்றி வந்து தங்களுடைய வினோத வேண்டுதல் வழிபாட்டை நிறைவேற்றினர்.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கூறுகையில், 'கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு இந்த 2 பக்தர்களின் குடும்பத்தினருக்கு குழந்தைகள் இல்லை. அப்போது அம்மனை மனமுருகி குழந்தை வரம் வேண்டும் என வேண்டினர். இதைத்தொடர்ந்து அவர்களுடைய குடும்பத்தினருக்கு குழந்தைகள் பிறந்தன. தங்களுடைய வேண்டுதல்கள் நிறைவேறியதால் அந்த குடும்பத்தினர் வயிற்றில் அக்னி சட்டி எடுத்தும், வயிற்றில் மத்தளத்தால் வாசித்தும் படுத்தபடி சக்தி மாரியம்மன் கோவிலை வலம் வந்தனர். தாத்தா, அப்பா, மகன் என தொடர்ந்து 5 தலைமுறைகளாக இந்த வேண்டுதல்களை இந்த 2 பக்தர்களின் குடும்பத்தினரும் நிறைவேற்றி வருகிறார்கள்,' என்றனர்.

விராலி இலை பந்தல்

முன்னதாக இந்த கோவிலில் விராலி இலையால் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. அந்த பந்தலின் கீழ் பக்தர்கள் அமர்ந்து வந்தால், அந்த பக்தர்களின் தீராத நோய்கள் தீர்ந்து விடும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இதனால் விராலி இலையால் அமைக்கப்பட்ட பந்தலின் கீழ் ஏராளமான பக்தர்கள் அமர்ந்து வந்தனர்.

இன்று (புதன்கிழமை) மாவிளக்கு எடுத்து பெண் பக்தர்கள் கோவிலுக்கு ஊர்வலமாக வரும் நிகழ்ச்சியும், இதைத்தொடர்ந்து அம்மனுக்கு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், அம்மன் ஊர்வலம் நிகழ்ச்சியும் நடக்கிறது. நாளை (வியாழக்கிழமை) கம்பம் பிடுங்குதல் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது.

விழாவையொட்டி வெள்ளித்திருப்பூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்