தசரதருக்கு பிள்ளைகளாக பிறந்த 4 தர்மங்கள்

தசரதருக்கு பிள்ளைகளாக பிறந்த 4 தர்மங்கள் என்ன என்பது பற்றி ஆன்மிக சான்றோர்களின் விளக்கம் அளித்துள்ளனர். அதுபற்றி இங்கே பார்ப்போம்..;

Update:2022-07-21 17:41 IST

ராமபிரானின் தந்தையான தசரத சக்கரவர்த்திக்கு, பல வருடங்களாக குழந்தைகளே இல்லை. தன்னுடைய ராஜ்ஜியத்தை ஆள்வதற்கு தனக்கு ஒரு மகனைத்தான் அவன் வேண்டினார். ஆனால் அவருக்கு நான்கு பிள்ளைகள் பிறந்தன. ஒரு பிள்ளை வேண்டியவருக்கு நான்கு பிள்ளைகள் பிறந்ததற்கான காரணம் என்ன என்பது பற்றி ஆன்மிக சான்றோர்களின் விளக்கம் அளித்துள்ளனர்.

அதாவது ராமபிரான், ஒரு மனிதன் தர்மத்தின் வழி நின்று தன்னுடைய வாழ்வை எப்படி நகர்த்த வேண்டும் என்பதற்கு உதாரணமாக அவதரித்தவர். தர்மம் என்பது நான்கு வகைப்படும். அவை, சாமான்ய தர்மம், சேஷ தர்மம், விசேஷ தர்மம், விசேஷத தர்மம் ஆகியவை. இந்த தர்மங்கள்தான் தசரதனுக்கு பிள்ளை களாக பிறந்ததாக சொல்லப்படுகிறது.

சாமான்ய தர்மம்

ஒரு பிள்ளை தன்னுடைய பெற்றோரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?, ஒரு சீடன் தன் குருவிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?, ஒரு கணவன் தன்னுடைய மனைவியிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? என்பது போன்ற சாமான்ய தர்மங்களை, மனிதனாக பிறப்பெடுத்ததன் மூலம் தானே பின்பற்றி எடுத்துக் காட்டுடன் நடந்தவர் ராமபிரான்.

சேஷ தர்மம்

சாமானிய தர்மங்களை, ஒழுங்காகச் செய்து கொண்டு வந்தால், கடைசியில் ஒரு நிலை வரும். அந்த நிலையில் பகவானுடைய பாதங்களைத் தவிர, வேறு ஒன்றும் நிரந்தரமானது அல்ல என்ற எண்ணம் ஏற்படும். இத்தகைய தர்மத்துக்கு, 'சேஷ தர்மம்' என்று பெயர். இதைப் பின்பற்றி ராமரே தன்னுடைய அனைத்துமானவர் என்று வாழ்ந்து காட்டியவன் லட்சுமணன்.

விசேஷ தர்மம்

தூரத்தில் இருந்து கொண்டே, எப்போதும் பகவானின் சிந்தனையாகவே இருப்பது 'விசேஷ தர்மம்.' இது சேஷ தர்மத்தைக் காட்டிலும் கடினமானது. இதைக் கடைப்பிடித்துக் காட்டியவன் பரதன். வனத்தில் இருந்த ராமபிரானை நினைத்தபடி, அவரது பாதுகைகளை அரியாசனத்தில் வைத்து, ராமனை நினைத்தபடியே 14 ஆண்டுகள் ஆட்சி செய்தவன், பரதன்.

விசேஷத தர்மம்

இறைவனை விட, அவருடைய அடியார்களுக்குத் தொண்டு செய்வதே முக்கியம் என்பதை எடுத்துரைக்கும் தர்மமே, 'விசேஷத தர்மம்.' இதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவன், தசரதனின் கடைசி பிள்ளையான சத்ருக்கணன். இவன் நாராயணனின் பக்தனான பரதனுக்கு தொண்டு செய்தே தன்னுடைய காலத்தை கழித்தவன்.

இந்த நான்கு தர்மங்களையும், ராமாவதாரத்தில் நான்கு புத்திரர்கள் மூலம் உலகுக்கு எடுத்துக் காட்டவே தசரதருக்கு நான்கு குழந்தைகள் பிறந்தன.

Tags:    

மேலும் செய்திகள்