ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில்கம்பத்துக்கு பெண்கள் புனிதநீர் ஊற்றி வழிபாடு

ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி பெண்கள் வழிபட்டனர்.;

Update:2023-04-01 03:28 IST

ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி பெண்கள் வழிபட்டனர்.

திருவிழா

ஈரோட்டில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் வகையறா கோவில்களாக சின்னமாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் இந்த ஆண்டுக்கான குண்டம் மற்றும் தேர்த்திருவிழா கடந்த மாதம் 21-ந்தேதி இரவு 9 மணிக்கு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

அதைத்தொடர்ந்து கடந்த 25-ந்தேதி இரவு 3 கோவில்களிலும் கம்பங்கள் நடப்பட்டது. இந்த கம்பங்களுக்கு தினந்தோறும் பக்தர்கள் புனிதநீர் ஊற்றி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் ஈரோடு மாநகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் புனிதநீர் ஊற்றுவதற்காக கோவிலுக்கு வந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி அம்மனை வழிபட்டு சென்றனர். இதையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி

வருகிற 4-ந்தேதி அதிகாலை 5.30 மணிக்கு, காரைவாய்க்கால் மாரியம்மன் கோவிலில் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் பூசாரிகள் மற்றும் பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

அதைத்தொடர்ந்து அன்று இரவு 8 மணிக்கு மாவிளக்கு எடுத்து பெண்கள் கோவிலுக்கு ஊர்வலமாக வருகிறார்கள். 5-ந்தேதி காலை 9.30 மணிக்கு தேர்வடம் பிடித்தலும், வருகிற 8-ந்தேதி பிற்பகல் 3 மணிக்கு மஞ்சள் நீராட்டுடன் கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 9-ந்தேதி மறுபூஜையுடன் திருவிழா நிறைவடைகிறது.

Tags:    

மேலும் செய்திகள்