ஆடி கிருத்திகை விழா.. முருகன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்
பால் குடம் எடுத்தும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் ஏராளமான பக்தர்கள் ஊர்வலமாக வந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர்.
ஆடி கிருத்திகையை முன்னிட்டு முருகன் கோவில்களில் இன்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன. அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று முருகனை தரிசனம் செய்துவருகின்றனர்.
அறுபடை வீடுகளில் 5-ம் படை வீடான திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சாமி கோவிலில் இன்று ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழா நடக்கிறது. ஆடி கிருத்திகையை முன்னிட்டு இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு முருகருக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. அதன்பின் தங்க கவசம், வைர கிரீடம் பச்சைக்கல் மரகத மாலை அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டம் மற்றும் பாண்டிச்சேரி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான முருக பக்தர்கள், பால் காவடி, மலர் காவடி, பன்னீர் காவடி, மயில் காவடி எடுத்து வந்து முருகனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தி வருகின்றனர்.
மாலையில் தெப்பத்திருவிழா (முதல் நாள் தெப்பம்) நடைபெறுகிறது. நாளை இரண்டாம் நாள் தெப்பம், 31ம் தேதி மூன்றாம் நாள் தெப்பம் நடக்கிறது. இந்த 3 நாட்கள் தெப்ப உற்சவத்தில் முருகர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.
சுவாமி மலை முருகன் கோவிலில் தங்க கவசம், வைரவேல் அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமிநாதரை அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்கின்றனர். இன்று மாலை தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.
சென்னை வடபழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இன்று அதிகாலை 3மணி அளவில் கோவில் நடை திறக்கப்பட்டு பின்னர் பள்ளியறை பூஜை முடிந்து முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இதையடுத்து அதிகாலை 5 மணி முதல் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று இரவு 11 மணி வரை முருகனை தரிசிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
நண்பகல் 12 மணி வரை சந்தனகாப்பு அலங்காரத்திலும், அதைத்தொடர்ந்து மாலை 4 மணி வரை ராஜ அலங்காரமும், பின்னர் இரவு 11 மணி வரை புஷ்ப அங்கி அலங்காரத்துடனும் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
வடபழனி, விருகம்பாக்கம், சாலிகிராமம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பால் குடம் எடுத்தும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் ஏராளமான பக்தர்கள் ஊர்வலமாக வந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர். பக்தர்கள் நெரிசல் இன்றி சாமி தரிசனம் செய்யும் வகையில் ஆங்காங்கே குடி தண்ணீர் வசதி, முதியோர், கைக்குழந்தையுடன் வருபவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வரிசை என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் கோவில் வளாகத்தை சுற்றியும் கோவிலுக்கு செல்லும் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை கட்டுப்படுத்தும் விதமாக போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் ஆன்மிக செய்திகளுக்கு.. https://www.dailythanthi.com/Others/Devotional