145. பேய் பிடித்த சிறுவன்

இயேசு தனது போதனையின் மையமாக எப்போதும் அன்பையும், பணிவையும் போதிப்பது வழக்கம். அப்படி ஒரு கதை சொன்னார்.

Update: 2017-01-17 00:00 GMT
பைபிள் மாந்தர்கள்

- சேவியர்

யேசு தனது போதனையின் மையமாக எப்போதும் அன்பையும், பணிவையும் போதிப்பது வழக்கம். அப்படி ஒரு கதை சொன்னார்.

இருவர் செபம் செய்ய ஆலயத்துக்குச் சென்றார்கள். ஒருவர் பரிசேயர். அவர் தம்மை நீதிமானாகக் கருதிக் கொண்டிருப்பவர்.  இன்னொருவர் வரி வசூலிப்பவர். ‘பாவி’ என அழைக்கப்படுபவர்.

பரிசேயர் ஆலயத்துக்குள் சென்றார். கடவுளின் சந்நிதி முன்னால் நிமிர்ந்து நின்று கொண்டு உரத்த குரலில் பேச ஆரம்பித்தார்.

‘கடவுளே... நான் கொள்ளையனாகவோ, வரி வசூலிக்கும் கேவலமான தொழில் செய்பவனாகவோ, விபசாரம் போன்ற தீய பழக்கங்களில் ஈடுபடும் மற்ற மக்களைப் போலவோ இல்லாததற்காய் உமக்கு நன்றி செலுத்து கிறேன்.  வருவாயில் பத்தில் ஒரு பங்கை நான் காணிக்கை செலுத்தத் தவறியதேயில்லை. வாரத்தில் இரண்டு முறை நோன்பு இருக்கிறேன்...’.

பரிசேயன் தன்னைப்பற்றி அடுக்கிக் கொண்டே போனான்.

வரிவசூலிப்பவனோ ஆலயத்துக்கு வெளியே நின்றான். வானத்தை ஏறிட்டுப் பார்க்கவும் தயங்கியவனாய் ‘கடவுளே நான் பாவி, என்னை மன்னியும்’ என்ற ஒற்றை வார்த்தையை உள்ளத்தின் ஆழத்திலிருந்து உச்சரித்தான்.

கதையைச் சொன்ன இயேசு, ‘பரிசேயன் அல்ல, அந்த வரிவசூலிப்பவன் தான் கடவுளுக்கு ஏற்புடையவனாய்த் திரும்பிச் சென்றான். ஏனென்று தெரியுமா?’ என்று         கேட்டார்.

கூட்டத்தினர் அமைதி காத்தனர்.

‘ஏனென்றால், தன்னைத் தாழ்த்துபவன் உயர்த்தப்படுவான். தன்னை உயர்த்துபவன் தாழ்த்தப்படுவான்!’ இயேசு சொல்ல சீடர்கள் தலையாட்டினார்கள்.

ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ அதையே நீங்கள் பிறருக்குச் செய்யுங்கள். இறைவாக்குகளும் திருச்சட்டங்களும் இதைத் தான் சொல்கின்றன.

ஒருவனை விட்டு வெளியேறுகின்ற தீய ஆவி வறண்ட வெளிகளெங்கும் சுற்றித் திரியும். பின் தான் வெளியேறிய இடத்துக்கே திரும்பி வரும். அந்த இடம் சுத்தமாக்கப்பட்டு யாருமின்றி இருக்கக் கண்டால் தன்னை விடப் பொல்லாத ஏழு ஆவிகளைக் கூட்டி வந்து மீண்டும் அவனிடம் குடியேறும். அவனுடைய பிந்தைய நிலைமை முந்தைய  நிலமையை விட மோசமாகும்.

தீய ஆவி வெளியேறிய பின் மனதை நல்ல சிந்தனைகளாலும், இறைவனாலும் நிரப்ப வேண்டும். இல்லையேல் அழிவு மிகவும் மோசமானதாக இருக்கும்.

‘உயிர்ப்பும் உயிரும் நானே. என்னில் நிலைத்திருப்பவன் இறப்பினும் வாழ்வான். என் வழியாக அன்றி யாரும்  தந்தையிடம் வர முடியாது’. ‘மானிட மகன் உங்கள் பாவங் களுக்காக தன்னுடைய உயிரையே கொடுப்பார். தன்னைப் பலியாகக் கொடுத்து உங்கள் பாவங்களை மீட்பார். நண்பனுக்காக உயிரைக் கொடுப்பதை விட மேலான அன்பு உலகில் இல்லை’

இயேசுவின் இந்த வார்த்தைகளைக் கேட்ட மக்கள் வியந்தனர்.

போதனைகளை முடித்து விட்டு இயேசு ஓய்வாய் இருந்த வேளை ஒன்றில் இயேசுவை நெருங்கி வந்தார் ஒருவர். அவருடைய முகத்தில் கவலையின் ரேகைகள். அவர் இயேசுவின் முன்னால் வந்து மண்டியிட்டார்.

‘ஐயா.. என் மகனுக்கு இரங்கும். அவன் வலிப்பு நோயால் பெரிதும் துன்பப்படுகிறான்’ என்றார்.

அந்த பையனைப் பிடித்திருப்பது நோய் அல்ல. பேய் என்பது இயேசுவுக்குப் புரிந்தது.

தந்தை தொடர்ந்தார்: ‘என் பையன் அடிக்கடி தண்ணீரில போய் விழுகிறான். சில சமயம் தீயில் போய் விழுகிறான். அவனை உம்முடைய சீடர்களிடம் கூட்டிக் கொண்டு   வந்தேன். ஆனால் அவர்களால் அவனைக் குணமாக்க முடியவில்லை’ தந்தை கலங்கினார்.

இயேசு தமது சீடர்களுடைய விசுவாசக் குறைவைக் கண்டு மனம் வருந்தினார். அந்த வருத்தத்தினால் சீடர்களைக் கடிந்து கொண்டார்.

‘நம்பிக்கையற்ற சீரழிந்த தலைமுறையினரே, எவ்வளவு காலம் நான் உங்களோடு இருக்க இயலும்? எவ்வளவு காலம் நான் உங்களைப் பொறுத்துக் கொள்ள இயலும்?’ என்று சொல்லி விட்டு தந்தையிடம் திரும்பினார்.

‘அந்தப் பையனை என்னிடம் கொண்டு வாருங்கள்...’ என்றார்.

தந்தை சென்று பையனை இயேசுவிடம் கொண்டு வந்தார். இயேசு வழக்கமாய்ப் பேய் ஓட்டுபவர்கள் செய்யும் எந்த விதமான அலட்டல்களையும் செய்யவில்லை. அந்தப் பேயை நேரடியாகக் கடிந்து கொண்டார். அந்தப் பையனை எதுவுமே செய்யவில்லை.

அவ்வளவு தான், அடுத்த வினாடியே அந்தப் பேய் அந்தப் பையனை விட்டு விட்டு ஓடியது.

இந்த நிகழ்ச்சி சீடர்களுக்கும் கவலையாய் மாறியது. இயேசு தனிமையாய் இருந்த பிறிதொரு பொழுதில் அவர்கள் இயேசுவிடம் வந்தனர்.

‘இயேசுவே, ஏன் எங்களால் இந்தப் பேயை ஓட்ட முடியவில்லை?’ அவர்களுடைய குரலில் கவலையும், இயலாமையும் இருந்தது.

இயேசு அவர்களிடம், ‘உங்களிடம் இன்னும் அதிக விசுவாசம் வேண்டும். நோன்பும், இறைவேண்டலும் அதிகம் வேண்டும். விசுவாசம் இருந்தால் இந்த மரத்தைப் பார்த்து நீ பெயர்ந்து போய் கடலில் விழு என்றால் கூட அது விழும்’ என்றார்.

சீடர்கள் விசுவாசத்தின் முக்கியத்துவத்தை இன்னும் ஆழமாய்ப் புரிந்து கொண்டார்கள்.

(தொடரும்)

மேலும் செய்திகள்