திருச்சானூரில் நவ.28-ல் பிரம்மோற்சவம் ஆரம்பம்.. விரிவான ஏற்பாடுகளை செய்கிறது தேவஸ்தானம்
தமிழக பக்தர்கள் அதிகளவில் வருவதால், தமிழில் வழிகாட்டி பெயர் பலகைகள் தயார் செய்ய வேண்டும் என தேவஸ்தான இணை செயல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.;
திருப்பதி:
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் அடுத்த மாதம் தொடங்க உள்ளது. விழாவிற்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்வதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தான இணை செயல் அலுவலர் வீரபிரம்மம் திருச்சானூர் வந்தார்.
திருமலை பிரம்மோற்சவத்துக்கு இணையாக திருச்சானூரிலும் பிரம்மோற்சவத்தை பிரமாண்டமாக நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளும்படி தேவஸ்தானத்தின் அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் இணை செயல் அலுவலர் வீரபிரம்மம் உத்தரவிட்டார். மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பத்மாவதி தாயார் கோவில், புஷ்கரணி (தெப்பக்குளம்), மாட வீதிகள், நவஜீவன் கண் மருத்துவமனை அருகில் உள்ள காலி நிலங்கள், கந்தசாலை வட்டம், உயர்நிலைப்பள்ளி சுற்றுப்புறம், பசுபு மண்டபம், புடி சாலை மற்றும் பிற பகுதிகளை பார்வையிட்டார்.
இதுபற்றி பேசிய இணை செயல் அலுவலர் வீரபிரம்மம், அடுத்த மாதம் 28-ம் தேதி தொடங்கி டிசம்பர் 6-ம் தேதி வரை திருச்சானூர் பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது, என்றார்.
அவர் மேலும் கூறியதாவது:-
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அனைத்து துறைகளும் பஞ்சாயத்து மற்றும் காவல்துறையுடன் ஒருங்கிணைந்து பக்தர்கள் சிரமம் இல்லாமல் தரிசனம் செய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். பிரம்மோற்சவத்திற்கு வரும் பக்தர்கள், எங்கள் குழுவினரின் ஒருங்கிணைந்த பணியால் திருப்திகரமாக மூலஸ்தான தாயாரையும் வாகன சேவைகளையும் தரிசனம் செய்யலாம்.
பிரம்மோற்சவத்தின் கடைசி நாளான பஞ்சமி தீர்த்த நாளில், புடி ரோடு, ரேணிகுண்டா, மார்க்கெட் யார்டு பகுதிகளில் வாகனங்கள் நிறுத்த இடம் ஒதுக்கப்படும். அதேபோல், நவஜீவன் கண் மருத்துவமனை, மேல்நிலைப்பள்ளி, கோசாலை வளாகம் (புடி ரோடு) ஆகிய இடங்களில் பக்தர்கள் ஓய்வெடுக்க ஜெர்மன் கூடாரங்கள் அமைக்கப்பட உள்ளன.
புஷ்கரணிக்கு செல்வதற்கும், வெளியே வருவதற்கும் உரிய வாயில்களை ஏற்பாடு செய்யவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக பக்தர்கள் அதிகளவில் வருவதால், தமிழில் வழிகாட்டி பெயர் பலகைகள் தயார் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.