அகரம் முத்தாலம்மன் கோவிலில் கண் திறப்பு வைபவம் - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

ஆயிரம் பொன் சப்பரத்தில் முத்தாலம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

Update: 2024-10-21 23:10 GMT

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்புவை அடுத்த அகரம் முத்தாலம்மன் கோவில் திருவிழா நடத்துவதற்காக கடந்த ஆகஸ்டு மாதம் 30-ந்தேதி அம்மனின் உத்தரவு கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் மூலம் கவுளி (பல்லி) சத்த சகுனம் வழியாக அம்மனின் உத்தரவு கிடைத்ததால் திருவிழா ஏற்பாடுகள் தொடங்கின.

விழாவில் சாட்டுதல் நிகழ்ச்சி கடந்த 13-ந்தேதி இரவு 10 மணிக்கு தொடங்கியது. அதனை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவிழாவிற்காக கங்கணம் கட்டிக் கொண்டு கடும் விரதத்தில் இருந்து வந்தனர். விழாவையொட்டி ஒவ்வொரு நாள் மாலையும் அம்மனின் பண்டார பெட்டி மற்றும் உற்சவர் மண்டபத்திற்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து இரவில் கலைநிகழ்ச்சிகளும் புராண நாடகங்களும் நடைபெற்றன.

இத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கண் திறப்பு வைபவம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. அம்மனின் பிறப்பு மண்டபத்தில் இருந்து கண் திறப்பு மண்டபத்திற்கு உற்சவ அம்மன் எடுத்துச் செல்லப்பட்டார். அங்கு திண்டுக்கல் மேற்கு தாசில்தார் ஜெயபிரகாஷ் மற்றும் அரசு உயர் அதிகாரிகள், ஊர் பெரியோர்கள், பொதுமக்கள் கூடியிருந்தனர். மேள தாள வாத்தியங்கள் முழங்க சகல நாத ஆராதனைகளுடன் அம்மனின் திருவுருவத்தில் திரை நீக்கி கண் திறப்பு மண்டபத்தில் கண் திறப்பு வைபவம் நடத்தி வைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அம்மன் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்தபடி அம்மன் கொலு மண்டபத்திற்கு வந்தார். அம்மன் ஆயிரம் பொன் சப்பரத்தில் உலா வந்தபோது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீச்சட்டி எடுத்தும், குழந்தை பாக்கியம் வேண்டியவர்கள் கரும்புத் தொட்டிலில் குழந்தைகளை வைத்து தூக்கி வந்தும் வழிபாடு செய்தனர். நள்ளிரவு 12 மணியளவில் புஷ்ப விமானத்தில் உலா வந்து வானக்காட்சி மண்டபத்தில் முத்தாலம்மன் எழுந்தருளினார். அவருக்கு பாரம்பரிய வழக்கம் முடிந்தபின்பு பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். இதனைத் தொடர்ந்து விடிய விடிய வாணவேடிக்கைகள் நடைபெற்றன.

இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 1.30 மணி வரை வானக்காட்சி மண்டபத்தில் அருள்பாலிக்கும் அகரம் முத்தாலம்மன் அங்கிருந்து சொருகு பட்டை சப்பரத்தில் பக்தர்களின் வெள்ளத்தில் மிதந்தபடி பூஞ்சோலைக்கு எழுந்தருள்கிறார். திருவிழா ஏற்பாடுகளை அகரம் முத்தாலம்மன் கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்