#லைவ் அப்டேட்ஸ்: கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்ற தயாராகும் ரஷியா
கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்ற ரஷியா முழு முழுவீச்சில் போரில் ஈடுபட்டுள்ளது.
உக்ரைனில் ரஷிய படைகளிடம் இங்கிலாந்து நாட்டினர் ஐடன் அஸ்லின் (வயது 28), ஷான் பின்னர் (48) மற்றும் மொராக்கோவை சேர்ந்த சவுதின் பிராகிம் ஆகிய 3 பேரும் பிடிபட்டனர்.
அவர்கள் மீது உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள டொனெட்ஸ்க் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் கூலிப்படையினர் என கோர்ட்டில் குற்றம் சாட்டப்பட்டது.
அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக கூறி, 3 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த கோர்ட்டு சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படாதது ஆகும்.
கூலிப்படையினர் என கோர்ட்டில் குற்றம்சாட்டப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து நாட்டினர் இருவரும் உக்ரைன் படையினர் என அவர்களது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த தீர்ப்பு சர்வதேச அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.
கீவ் நகரில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை அமெரிக்க தொழில் அதிபரும், நன்கொடையாளருமான ஹோவர்ட் பப்பெட் சந்தித்து பேசினார்.
அப்போது அவர், போரினால் சிதைந்துள்ள உக்ரைனை மறுகட்டமைப்பு செய்யவும், கண்ணிவெடிகளை அகற்றவும், பள்ளிக்கூடங்களில் ஊட்டச்சத்து மேம்படுத்தவும் உதவத்தயார் என கூறினார்.
இதற்கிடையே உக்ரைனில் ரஷியா கைப்பற்றியுள்ள துறைமுக நகரமான மரியுபோலில் ஐந்தில் இரு பங்கு கட்டிட இடிபாடுகளில் தேடியதில் ஒவ்வொன்றிலும் 50 முதல் 100 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த உடல்கள் பிணவறை மற்றும் குப்பை கிடங்குகளுக்கு எடுத்துச்செல்லப்படுகின்றன. இந்த அதிர்ச்சி தகவலை அந்த நகர மேயரின் உதவியாளர் பெட்ரோ ஆன்ட்ரியுஷ்செங்கோ சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் போரால் உணவு மற்றும் எரிசக்தி பொருட்கள் கடுமையான விலை உயர்வை சந்தித்துள்ளன. இதனால் லட்சக்கணக்கான மக்களின் துன்பம் அதிகரித்துள்ளது என்று ஐ.நா. சபையின் அறிக்கை கூறுகிறது. இதுபற்றி ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் கருத்து தெரிவிக்கையில், “இந்த அறிக்கை உணவு பாதுகாப்பு, எரிசக்தி, நிதி ஆகியவற்றில் உக்ரைன் போர் முறையான, கடுமையான, வேகமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதை காட்டுகிறது” என கூறினார்.
மேலும் போருக்கு மத்தியிலும் உக்ரைனின் உணவு தானிய உற்பத்தியும், ரஷியாவின் உர உற்பத்தியும் உலக சந்தைக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
உக்ரைன் மீதான ரஷிய போர் 106 நாட்களை கடந்துள்ளது. தலைநகர் கீவை கைப்பற்ற முடியாத நிலையில் மரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்களை ரஷியா கைப்பற்றியது. தற்போது அந்த நாடு, கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்ற முழு முழுவீச்சில் போரில் ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க கார்ப்பரேட் நிறுவன தலைவர்களுடன் காணொலி காட்சி வழியாக பேசினார். அப்போது அவர் கூறுகையில், “ரஷியா வலுவாக இருப்பதாக நினைப்பதால் போரை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை. நாங்கள் ரஷியாவை பலவீனப்படுத்த விரும்புகிறோம். உலகமும் அதைச்செய்ய வேண்டும். போர்க்களத்தில் செய்ய வேண்டிய பங்களிப்பை உக்ரைன் செய்து வருகிறது. ரஷியாவை பொருளாதார ரீதியில் இன்னும் பலவீனப்படுத்த கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.