ரூ.5 ஆயிரம் கோடி செலவில் அமேசான் நிறுவன தலைவரின் திருமணம்... உண்மை என்ன?

ஜெப் பெசோஸ் மற்றும் லாரன் சாஞ்சஸ் இடையேயான திருமணத்திற்கு ஆகும் செலவு ரூ.5 ஆயிரம் கோடி என தி நியூயார்க் போஸ்ட் என்ற பத்திரிகை சமீபத்தில் செய்தி வெளியிட்டு இருந்தது.

Update: 2024-12-23 21:44 GMT

வாஷிங்டன்,

உலக அளவில் ஆன்லைன் வழியே பொருட்களை விற்பனை செய்வதில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களில் ஒன்றாக அமேசான் நிறுவனம் இடம் பெற்றுள்ளது. இதன் தலைவர் ஜெப் பெசோஸ். இவர் லாரன் சாஞ்சஸ் என்பவரை 2019-ம் ஆண்டு ஜனவரி முதல் டேட்டிங் செய்து வருகிறார். அவருடன் பல்வேறு இடங்களில் ஒன்றாக சுற்றி வருகிறார்.

இந்நிலையில், இவர்கள் திருமணம் செய்து கொள்வது என முடிவு செய்து, கடந்த ஆண்டு மே மாதம் நிச்சயமும் நடந்து முடிந்தது. இதனால், அவர்கள் இருவரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

இந்நிலையில், வருகிற 28-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, இந்த ஜோடி திருமணம் செய்து கொள்ள இருக்கும் தகவல் வெளியானது. கொலராடோ மாகாணத்தின் ஆஸ்பன் நகரில் நடைபெற உள்ள இவர்களுடைய திருமணத்திற்கு ஆகும் செலவு ரூ.5 ஆயிரம் கோடி (600 மில்லியன் டாலர்கள்) என தி நியூயார்க் போஸ்ட் என்ற பத்திரிகை சமீபத்தில் செய்தி வெளியிட்டு இருந்தது.

இதனை பார்த்து அனைவரும் ஆச்சரியமடைந்தனர். இவ்வளவு செலவு செய்து திருமணம் செய்கிறார்களா? என பலருக்கும் வியப்பு ஏற்பட்டது. இது எந்த அளவுக்கு உண்மை? என தெரியாமல் இருந்த நிலையில், பெசோஸ் அதற்கான விளக்கம் அளித்துள்ளார். இந்த செய்தி முற்றிலும் பொய்யானது என தன்னுடைய எக்ஸ் சமூக ஊடகத்தில் அவர் தெரிவித்து உள்ளார். அந்த பதிவில், நீங்கள் வாசிக்கும் எல்லாவற்றையும் நம்பி விடாதீர்கள் என்ற பழமொழி இன்றளவில் அதிக உண்மையாக இருக்கிறது.

உண்மை ஆடையை அணிந்து புறப்படுவதற்கு முன்பு, பொய்கள் உலகை சுற்றி வந்து விடுகின்றன. அதனால், இதுபோன்ற மக்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். அவர்களை மிக எளிதில் நம்பி எளிதில் ஏமாந்து விடாதீர்கள் என்று தெரிவித்து இருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்