ஏமன் கடற்கரை அருகே அகதிகளின் படகு கவிழ்ந்து விபத்து - 49 பேர் உயிரிழப்பு

ஏமன் கடற்கரை அருகே அகதிகளின் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 49 பேர் உயிரிழந்தனர்.;

Update:2024-06-11 19:18 IST

Image Courtesy : AFP

சனா,

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஏராளமான மக்கள் ஏமன் வழியாக வளைகுடா நாடுகளுக்கு வேலை தேடி அகதிகளாக செல்கின்றனர். ஏமன் நாட்டில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், அரசுப்படையினருக்கும் இடையே பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வரும் நிலையிலும், அங்கு அகதிகளாக வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சோமாலியா மற்றும் எத்தியோப்பியாவில் இருந்து சுமார் 260 அகதிகளை ஏற்றிக்கொண்டு ஏடன் வளைகுடா வழியாக படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த படகு நேற்று இரவு ஏமன் கடற்கரை அருகே வந்தபோது கடலில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்து குறித்து தகவலறிந்து மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 31 பெண்கள், 6 குழந்தைகள் உள்பட 49 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை 71 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 140 பேரை காணவில்லை என்றும், அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் ஐ.நா. சர்வதேச அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்