உக்ரைனை ரஷிய ராணுவம் அடிபணிய வைக்கும் என புதினுக்கு அபார நம்பிக்கை: அமெரிக்காவின் சி.ஐ.ஏ. இயக்குநர்

உக்ரைனை அடித்து நொறுக்கி, அடிபணிய வைப்பதில், ரஷிய ராணுவத்தின் திறமை மீது அதிபர் புதினுக்கு அபார நம்பிக்கை உள்ளது என சி.ஐ.ஏ. இயக்குநர் கூறியுள்ளார்,

Update: 2023-02-27 14:22 GMT


வாஷிங்டன்,


உக்ரைன் நாட்டுக்கு எதிராக ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி இறுதியில் ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் படையெடுப்பில் ஈடுபட்டது. இந்த போர் ஓராண்டை கடந்து தொடர்ந்து நீடித்து வருகிறது. போரால், இரு தரப்பிலும் பலத்த பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

உக்ரைனின் உள்கட்டமைப்பை இலக்காக கொண்டு ரஷியா ஏவுகணை தாக்குதல்களை தொடுத்து வருகிறது. எனினும், முக்கிய பகுதிகளை கைப்பற்றினாலும் அவற்றை உக்ரைன் மீண்டும் தன்வசப்படுத்தி வருகிறது.

போர் 2-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், அமெரிக்காவின் சி.ஐ.ஏ. அமைப்பின் இயக்குனரான வில்லியம் பர்ன்ஸ் கூறும்போது, உக்ரைனை அடித்து நொறுக்கி, தனக்கு அடிபணிய வைப்பதில், ரஷிய ராணுவத்தின் திறமை மீது அதிபர் புதின் அபார நம்பிக்கை வைத்திருக்கிறார் என கூறியுள்ளார்.

உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுத சப்ளை, நிதியுதவி என வழங்கி வரும் ஐரோப்பிய நாடுகளையும் களைப்புற செய்வார் என அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், அமெரிக்காவுடனான ஆயுத கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தில் பங்கேற்காமல் ரஷியா விலகியது. ஆனால், அமெரிக்காவுடன் பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் அணு ஆயுத பயன்பாட்டில் ரஷியாவுக்கு எதிராக கைகோர்த்து உள்ளன.

இதுபற்றி புதின் பேட்டி ஒன்றில் கூறும்போது, நம்முடைய நாட்டை பாதுகாக்க, பாதுகாப்பு மற்றும் செயல் திட்டம் வாய்ந்த ஸ்திர தன்மையை உறுதி செய்ய, அணு ஆயுத சக்தியை அமெரிக்கா மட்டுமின்றி பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு எதிராகவும் பயன்படுத்துவது பற்றி கணக்கில் கொள்ளப்படும் என கூறி அதிரடி காட்டினார்.

உக்ரைன் மீது நடந்த படையெடுப்பு, ரஷியாவின் பாதுகாப்புக்கு எதிரான அச்சுறுத்தல்களை குறைக்கும் இலக்குடனேயே நடந்து உள்ளது என ஓராண்டுக்கு முன் உக்ரைன் மீது போர் தொடுத்தபோது புதின் குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்