ஷின்ஜோ அபேயின் நினைவு நிகழ்ச்சி: ஜப்பான் சென்றடைந்தார் பிரதமர் மோடி

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபேயின் நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி டோக்கியோ சென்றடைந்தார். .;

Update:2022-09-27 04:39 IST

image Courtacy: ANI

டோக்கியோ

ஜப்பான் வரலாற்றில் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் ஷின்ஜோ அபே (வயது 67). கடந்த 2020-ம் ஆண்டு பதவி விலகிய அவர், கடந்த ஜூலை மாதம் 8-ந் தேதி அங்கு நரா என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவரை டெட்சுய யமகாமி என்பவர் சுட்டுக்கொன்றார். இது ஜப்பான் மட்டுமின்றி அகில உலகிலும் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது.

ஷின்ஜோ அபேயின் உடலுக்கு ஜூலை 12-ந் தேதி டோக்கியோவில் இறுதிச்சடங்கு நடந்தது. பின்னர் உடல் தகனம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், ஜப்பான் அரசு சார்பில் ஷின்ஜோ அபேக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) நினைவு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. டோக்கியோவில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. ஜப்பானின் அழைப்பை ஏற்று, ஷின்ஜோ அபே நினைவு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நேரில் பங்கேற்கிறார். இதற்காக நேற்று டெல்லியில் இருந்து ஜப்பான் புறப்பட்ட அவர் தற்போது டோக்கியோ சென்றடைந்துள்ளார். டோக்கியோவில் அவர் ஷின்ஜோ அபேயின் மனைவியை சந்தித்து பேசுகிறார். அப்போது இந்திய மக்களின் சார்பில் இரங்கலை தெரிவிக்கிறார்.

மேலும் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவையும் பிரதமர் மோடி சந்தித்து பேசுவார் என மத்திய வெளியுறவு செயலாளர் வினய் குவாத்ரா தெரிவித்தார்.

பிரதமர் மோடியின் இந்த ஜப்பான் பயணம் டெல்லியில் இருந்து புறப்படுவதில் இருந்து 12 முதல் 16 மணி நேரம் நீடிக்கும் என கூறிய வினய் குவாத்ரா, ஷின்ஜோ அபேயை கவுரவப்படுத்தும் வகையில் மோடியின் பயணம் அமையும் என்றும் கூறினார்.

ஜப்பான் புறப்படும் முன் பிரதமர் மோடி தனது டுவிட்டர் தளத்தில், 'ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா மற்றும் ஷின்ஜோ அபேயின் மனைவியிடம் இந்தியா சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பேன். ஷின்ஜோ அபேயின் எண்ணப்படி இந்தியா-ஜப்பான் உறவுகளை மேலும் வலுப்படுத்த நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்' என குறிப்பிட்டு இருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்