10ம் நாளாக தொடரும் போர்: ஹமாஸ் ஒட்டுமொத்தமாக ஒழிக்கப்படவேண்டும் - ஜோ பைடன்

Update: 2023-10-15 22:30 GMT
Live Updates - Page 3
2023-10-15 23:25 GMT

மும்முனை தாக்குதலுக்கு தயாராகும், இஸ்ரேல் ராணுவம்

காசாவில் வான், கடல், தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்தப்போவதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் தரப்பில் சமூகவலைத்தளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “மும்முனை தாக்குதல் உள்பட பல்வேறு தாக்குதல் நடவடிக்கை திட்டங்களை செயல்படுத்த ராணுவம் தயாராகி வருகிறது” என கூறப்பட்டுள்ளது.

முன்னதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு காசா எல்லையில் ராணுவ வீரர்களை சந்தித்தார். பின்னர் அளித்தப் பேட்டியில், ‘இனிமேல் தான் நிறைய நடக்கவுள்ளது' என்று கூறினார். அதன் பிறகே மும்முனை தாக்குதல் குறித்த அறிவிப்பை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டது.

இதனிடையே வடக்கு காசா மீது இஸ்ரேல் ராணுவம் எந்த நேரத்திலும் தரைவழி தாக்குதலை தொடங்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வானிலை காரணமாக தரைவழி தாக்குதலை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.

காசாவில் 2,329 பேர் பலி

அதேவேளையில் காசா மீதான வான்தாக்குதலை இஸ்ரேல் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக் கின்றன. இதனால் காசாவில் நிமிடத்துக்கு நிமிடம் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.

இஸ்ரேலின் தாக்குதலில் காசாவில் இதுவரை 2,329 பேர் பலியாகியிருப்பதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது கடந்த 2014-ம் ஆண்டு இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நடந்த போரில் ஏற்பட்ட உயிரிழப்பை விடவும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 வாரங்கள் நடந்த அந்த போரில் 1,462 அப்பாவி பொதுமக்கள் உள்பட 2,251 பேர் உயிரிழந்தாக ஐ.நா. புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அந்த போரில் இஸ்ரேல் தரப்பில் 74 பேர் பலியானதாகவும், அவர்களில் 6 பேர் அப்பாவி மக்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது நடந்து வரும் போரில் இஸ்ரேலில் 1,300-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலைப் பொறுத்தவரை, எகிப்து மற்றும் சிரியாவுடனான 1973 மோதலுக்குப் பிறகு அந்த நாடு சந்தித்த மிகப்பெரிய இழப்பு இதுவாகும்.

2023-10-15 22:54 GMT

காசா ஆஸ்பத்திரியில் தஞ்சமடைந்த 35 ஆயிரம் பேர்

காசாவின் மிகப்பெரிய ஆஸ்பத்திரியான அல்-ஷீபா ஆஸ்பத்திரி மிகவும் மோசமான சூழலை எதிர்கொண்டு வருவதாக அங்குள்ள டாக்டர்கள் கூறுகின்றனர். நோயாளிகளை தவிர்த்து பெண்கள், சிறுவர்கள் உள்பட சுமார் 35 ஆயிரம் பேர் பாதுகாப்பு தேடி அந்த ஆஸ்பத்திரியில் தஞ்சமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

தங்கள் வீடுகள் அழிக்கப்பட்டு, அங்கிருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டதால், அந்த ஆஸ்பத்திரிதான் தங்களுக்குப் பாதுகாப்பான இடம் என்று நம்பி, அங்கு மக்கள் அடைக்கலம் புகுந்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

அங்கு பணியாற்றி வரும் டாக்டர் ஒருவர் கூறுகையில், “தோல் கருகி, உறுப்புகளை இழந்து வலியால் துடிக்கிற நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க போதிய வலிநிவாரணி மருந்துகள் இருப்பில் கிடையாது. மருத்துவர்கள், மருத்துவ பணியாளார்கள் தொடர்ந்து பணியில் உள்ளார்கள். காயமுற்றவர்கள் தங்கள் முறைக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதாகியுள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் என்பது கவலைக்குரிய ஒன்று” என கூறினார்.

2023-10-15 22:46 GMT

காசாவில் நிலவும் உணவு, குடிநீர் பஞ்சம்

இஸ்ரேலின் தாக்குதலால் உயிர் பயத்தில் நடுங்கி வரும் காசா மக்கள் மறுபுறம் உணவு, குடிநீர் பஞ்சத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால் இஸ்ரேலின் தாக்குதலில் இருந்து தப்பினாலும் உணவு கிடைக்காமல் மக்கள் உயிரிழக்கும் அபாயம் நிலவுவதாக மனிதநேய ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அதே சமயம் காசாவில் பிணை கைதிகளாக வைக்கப்பட்டிருக்கும் இஸ்ரேலியர்களை ஹமாஸ் அமைப்பினர் விடுவிக்கும் வரை காசாவுக்கான எந்த வினியோகத்தையும் தொடங்க மாட்டோம் என இஸ்ரேல் பிடிவாதமாக உள்ளது.

இதனிடையே இஸ்ரேலின் தாக்குதலில் படுகாயம் அடைந்து ஒவ்வொரு மணிநேரமும் நூற்றுக்கணக்கானோர் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்படுவதால் காசாவில் உள்ள அனைத்து ஆஸ்பத்திரிகளும் நிரம்பி வழிகின்றன. அதே வேளையில் மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை தேவைகள் கிடைக்காமல் அல்லல்படும் அவலநிலைக்கு ஆஸ்பத்திரிகள் தள்ளப்பட்டுள்ளன.

2023-10-15 22:36 GMT

பூமியின் நரகமாக மாறும் காசா: மும்முனை தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் 2-வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. இருதரப்புக்கும் இடையே நடந்த முந்தைய போர்களை விடவும் இந்த போர் அபாயகரமானதாக மாறி வருகிறது.

அதற்கு எடுத்துக்காட்டாக காசாவின் தற்போதைய நிலைமையை சொல்லலாம். பூமியின் நரகம் என்றும் சொல்லும் அளவுக்கு அந்த நகரம் மிகவும் மோசமான சூழலை எதிர்கொண்டு வருகிறது.

அங்கு ஒரு நிமிட இடைவெளி கூட இல்லாமல் இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுகளை வீசிய வண்ணம் உள்ளன. இதனால் அங்கு 24 மணி நேரமும் குண்டு சத்தம் விண்ணை பிளக்கிறது.

இஸ்ரேல் ராணுவத்தின் இடைவிடாத குண்டு மழையால் காசாவில் இருக்கும் கட்டிடங்கள் தரைமட்டமாகி வருகின்றன. இதனால் காசாவில் எங்கு பார்த்தாலும் கான்கிரீட் குவியலாக காட்சியளிக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்