மும்முனை தாக்குதலுக்கு தயாராகும், இஸ்ரேல்... ... 10ம் நாளாக தொடரும் போர்: ஹமாஸ் ஒட்டுமொத்தமாக ஒழிக்கப்படவேண்டும் - ஜோ பைடன்

மும்முனை தாக்குதலுக்கு தயாராகும், இஸ்ரேல் ராணுவம்

காசாவில் வான், கடல், தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்தப்போவதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் தரப்பில் சமூகவலைத்தளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “மும்முனை தாக்குதல் உள்பட பல்வேறு தாக்குதல் நடவடிக்கை திட்டங்களை செயல்படுத்த ராணுவம் தயாராகி வருகிறது” என கூறப்பட்டுள்ளது.

முன்னதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு காசா எல்லையில் ராணுவ வீரர்களை சந்தித்தார். பின்னர் அளித்தப் பேட்டியில், ‘இனிமேல் தான் நிறைய நடக்கவுள்ளது' என்று கூறினார். அதன் பிறகே மும்முனை தாக்குதல் குறித்த அறிவிப்பை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டது.

இதனிடையே வடக்கு காசா மீது இஸ்ரேல் ராணுவம் எந்த நேரத்திலும் தரைவழி தாக்குதலை தொடங்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வானிலை காரணமாக தரைவழி தாக்குதலை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.

காசாவில் 2,329 பேர் பலி

அதேவேளையில் காசா மீதான வான்தாக்குதலை இஸ்ரேல் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக் கின்றன. இதனால் காசாவில் நிமிடத்துக்கு நிமிடம் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.

இஸ்ரேலின் தாக்குதலில் காசாவில் இதுவரை 2,329 பேர் பலியாகியிருப்பதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது கடந்த 2014-ம் ஆண்டு இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நடந்த போரில் ஏற்பட்ட உயிரிழப்பை விடவும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 வாரங்கள் நடந்த அந்த போரில் 1,462 அப்பாவி பொதுமக்கள் உள்பட 2,251 பேர் உயிரிழந்தாக ஐ.நா. புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அந்த போரில் இஸ்ரேல் தரப்பில் 74 பேர் பலியானதாகவும், அவர்களில் 6 பேர் அப்பாவி மக்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது நடந்து வரும் போரில் இஸ்ரேலில் 1,300-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலைப் பொறுத்தவரை, எகிப்து மற்றும் சிரியாவுடனான 1973 மோதலுக்குப் பிறகு அந்த நாடு சந்தித்த மிகப்பெரிய இழப்பு இதுவாகும்.

Update: 2023-10-15 23:25 GMT

Linked news